» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், கனிமொழி, உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு

வியாழன் 18, ஏப்ரல் 2019 12:09:42 PM (IST)



சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைந்திட வேண்டும். எல்லோரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது.

500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்.. சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் ஆணையம் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அதிமுகதான் என்றார். திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார். 

தேனியில் ஓபிஎஸ் வாக்களிப்பு

தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகனும் வேட்பாளருமான ரவீந்திரநாத் ஆகியோர் குடும்பத்துடன் பெரியகுள செவன்த் டே மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். 

விஜயகாந்த் - வைகோ

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர். வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory