» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிலைகளை பாதுகாக்க முடியாவிட்டால் கோவில்களை மூடிவிடலாமே? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

புதன் 24, ஏப்ரல் 2019 11:21:14 AM (IST)

சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் கோவில்களை மூடிவிடலாமே? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீல் பி.ஜெகந்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் இருந்து சோழர் ஆட்சி கால செம்பு பட்டயங்கள், சிவன், விஷ்ணு, சோழர்கள் போன்ற பாரம்பரியமிக்க பழமையான சிலைகள் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்பு கூட்டு மீட்புக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய கலாசார துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை’ என்று குற்றம்சாட்டினார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றார்.

பின்னர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் இருந்த 1,300 ஆண்டுகள் பழமையான மயில் சிலை காணாமல்போனது தொடர்பான வழக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.பின்னர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது, சாமி சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், தமிழக அரசு இந்து கோவில்களை மூடிவிடலாமே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்குகளை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory