» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா வழிகாட்டிய ஒருவர் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் : நிர்வாகி போர்க்கொடி

சனி 8, ஜூன் 2019 5:02:45 PM (IST)

ஜெயலலிதா வழிகாட்டிய ஒருவர் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி-பன்னீர் செல்வம் அணிகள் இணைந்த பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இதற்கிடையே கட்சியில் முடிவுகள் எடுப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் இடையே முரண்பாடுகள் உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது. 

இந்நிலையில் ஜெயலலிதா வழிகாட்டிய ஒருவர் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்ற குரல் அதிமுகவுக்குள் ஒலிக்கத் துவங்கியுள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களிடம் அதிமுக மதுரை மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, "மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று வெற்றியை சமர்ப்பித்துள்ளார். இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை. இது யார் குற்றம்? 9 பேரின் குற்றமா அல்லது தலைமைக் கழகத்தின் குற்றமா? இல்லை ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வரவில்லையா? அவர்களை தடுப்பது யார்?” என்று கேள்வி எழுப்பினார்.

"9 தொகுதி வெற்றி என்பது மிகப்பெரியது. அரசைக் காப்பாற்றுகிற வெற்றி. அந்த வெற்றியைக் கொண்டாட ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குச் சென்று 9 பேரும் அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கு காரணம் யார்? இதுபோன்ற சின்னச் சின்ன நெருடல்கள் அதிமுகவை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. திமுக என்ன முயற்சி செய்தாலும், எங்களுக்குள் எந்த பிரச்சினை இருப்பினும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் திமுகவுக்குச் செல்லமாட்டோம்” என்றவர்,

ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை பொதுக்குழுவில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்."இதனை உட்கட்சிப் பூசல் என்று கருதக்கூடாது. பொதுக்குழுவில் முன்வைக்க வேண்டிய பிரச்சினை இது. பொதுக்குழு கூட்டப்படாததால் ஊடகங்கள் வாயிலாக இதனை முன்வைத்துள்ளேன். தோல்விக்கான காரணத்தை ஆராய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டச் சொல்லி முதல்வரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துவிட்டோம். திறமையான, சுயநலமற்ற மக்கள் பணியாற்றக் கூடிய ஒருவரை அதிமுகவிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்தார். அதுபோல முதல்வரே பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறுகிறீர்களா என்ற கேள்விக்கு, "இதுகுறித்து பொதுக்குழுவில் தெரிவிப்போம். அதிகாரம் படைத்தவர், கட்சியைக் கட்டுக்கோப்புடன் நடத்துகிறவர் முதல்வராக இருந்தாலும், முதல்வராக இல்லாமல் இருந்தாலும் தவறு கிடையாது. அது யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. இரு தலைமையின் கீழ் செயல்படுவதால் நாங்கள் உடனுக்குடன் உரிய முடிவு எடுக்கமுடிவதில்லை” என்றார்.

இருவரில் ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்கிறீர்களா அல்லது புதியவர் வரவேண்டும் என்கிறீர்களா என்ற கேள்விக்கு, "மக்கள் சக்தி படைத்தவர், ஜெயலலிதாவால் கொஞ்ச நாள் அங்கீகரிப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும். எடப்பாடி, பன்னீர் இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிப்பட்டவர்கள்தான். அதில் யார் சிறந்தவர்கள் என்று பார்க்கலாம். அல்லது புதியவர் யாராக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார். இருவரும் ஒன்றுசேர்ந்து அம்மா நினைத்த ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்களின் தேவை ஈர்ப்பு சக்தியுள்ள ஒரே தலைமை. இதனை என்னுடைய முதல் குரலாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory