» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவின்பால் வினியோகம் லாரி ஒப்பந்தங்களை இறுதி செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு 9, ஜூன் 2019 9:31:51 AM (IST)

ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அசோக்நகரை சேர்ந்த ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின், ஆவின் பால் வினியோகம் செய்யும் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்களாக கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். இந்தநிலையில், 2019–2021–ம் ஆண்டில் பால் சப்ளை செய்யும் 312 டேங்கர்களுக்கான ஒப்பந்த புள்ளியை ஆவின் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் கோரியது.

ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்வதற்கு முன்பே, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனர் ஒப்பந்த காலத்தை மாற்றியும், ஒப்பந்த தொகையை ரூ.240 கோடியிலிருந்து, ரூ.360 கோடியாக உயர்த்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை செயலாளருக்கு வேண்டப்பட்டவர்களை டேங்கர் லாரி உரிமையாளர்களை ஒப்பந்ததாரர்களாக நியமிக்கும்வரை டெண்டர் நடவடிக்கைகளில் மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து ஏற்கனவே, ஒரு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக ஒப்பந்தத்தை திறப்பதற்கான முடிவை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் எடுத்தது. இதையடுத்து, நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் முடிவை தள்ளிவைத்தது.

மேலும், ஒப்பந்த புள்ளிக்கான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஒப்பந்தம் கோரும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால், தேர்தல் நடத்தை விதியையும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் மீறியுள்ளது. எனவே, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் டேங்கர் லாரிகள் ஒப்பந்த டெண்டர் நடவடிக்கைகளை இறுதி செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். டேங்கர் லாரி ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory