» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தருமபுரி இளவரசன் விவகாரத்தில் பாமக மீது பழி சுமத்தியவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

திங்கள் 10, ஜூன் 2019 10:22:46 AM (IST)

தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை தான் என நீதிபதி சிங்காரவேலன் ஆணையம் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விகாரத்தில் கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள், மன்னிப்பு கோருவார்களா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் தருமபுரி இளவரசனின் மரணம். திவ்யா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்த இளவரசனுக்கு வலுத்தது எதிர்ப்பு. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரு சமூகத்தினர் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனால் இளவரசனை பிரிந்து சென்றார் திவ்யா.

இந்நிலையில் திடீரென இளவரசன் தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சிங்காரவேலன் ஆணையம் தற்கொலை தான் என கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை, விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தகவலை நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. விசாரணை ஆணையத்தின் இத்தீர்ப்பு பல ஆண்டுகளாக கட்டவிழ்க்கப்பட்டு வந்த கதைகளுக்கு முடிவு கட்டியுள்ளது. இளவரசன் தற்கொலை தான் செய்து கொண்டார் என 2 முறை நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்விலும், காவல்துறை விசாரணையிலும் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. ஆனால், இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்து விட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்தன.

நெருக்கடிகளுக்கிடையே அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம் விரிவான விசாரணைக்குப் பின், இளவரசன் மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாத நிலையில், தி இந்து குழுமத்தின் பிரண்ட்லைன் இதழ் இதுகுறித்த விவரங்களை சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

இளவரசனுக்கு நீண்டநாட்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க. மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது. பா.ம.க. மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துவதே பெரும் சுமையாக மாறி விட்ட நிலையில், தமக்கு சென்னையில் ஏதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி தமது சமுதாய அரசியல் தலைவரிடம் இளவரசன் மன்றாடியுள்ளார். ஆனால், இளவரசன் வாழ்வதை விட அவரை வைத்து தாம் வாழ வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்த அந்த தலைவர், இளவரசனை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையான விஷயங்களை சாதித்துக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் திட்டி விரட்டியடித்துள்ளார்.

இதனால் இளவரசனின் மனதில் தற்கொலை எண்ணம் தலைதூக்கி தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகும் இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் தான் இருந்துள்ளார். மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், தற்கொலையை தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவருக்கு துணையாக இருப்பதைப் போல நடித்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக உண்மையை மறைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்துவதை கைவிட்டு நேர்மையான அரசியல் செய்ய முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

BalajiJun 11, 2019 - 12:37:29 PM | Posted IP 108.1*****

oh இது தான் பெரியார் பூமி ஆஅ.. சரி தான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory