» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

8 வழிச்சாலையில் காட்டும் ஆர்வம் காவிரி பிரச்னையில் வராதது ஏன்?: எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி

செவ்வாய் 11, ஜூன் 2019 10:32:10 AM (IST)

தமிழக முதல்வர் 8 வழிச்சாலையில் காட்டும் அவசரம், ஆர்வம் ஏன் காவிரி பிரச்னையில் வரவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு கூட்டம், கலைஞர் பிறந்தநாள் விழா, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ேநற்று இரவு நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற சூளுரை ஏற்கும் கூட்டமாக இதை பயன்படுத்திக் கொள்கிறேன். 5 முறை ஆட்சி பொறுப்பிலிருந்து கலைஞர் தீட்டிய திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மீண்டும், வெற்றி பெற்று அந்த வெற்றியை நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்துவது தான் எனது உறுதியான எண்ணம்.

நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நாடாளுமன்றம் கூடட்டும் அப்போது பாருங்கள். ஏற்கனவே 39 பேர் இருந்தீர்களே, ஜடம்மாதிரி, கூனிக்குறுகி. அண்ணா சொன்னதுபோல உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே இந்தி திணிப்பு என்ற நச்சுப்பாம்பை அடித்துவிரட்டிவிட்டோம். மும்மொழியை எதிர்த்து விரட்டினோம். உடனே பின்வாங்கி உள்ளனர். அதற்கு திமுக தான் காரணம். தமிழகத்தில் காட்டிய எதிர்ப்பு அலை தான் காரணம். தமிழினத்துக்கு துரோகம் நினைத்தால் என்ன நடக்கும் என காட்டிவிட்டோம்.

5 மாதங்களுக்கு முன் கூட வேண்டிய காவிரி ஆணைய கூட்டம் சமீபத்தில் தான் கூடியது. தமிழகத்துக்கு உரிய நீர் வருகிறதா? அதை கர்நாடகா அரசு தருகிறதா என்பதை கண்காணிப்பது தான் அதன் பணி. அதை விடுத்து, காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து பேசுகின்றனர். அது காவிரி ஆணையமா? அல்லது கர்நாடகா ஆணையமா? தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது. மேகதாதுவில் அணைகட்டுவோம் என கர்நாடகா மாநில அமைச்சர் பேசுகிறார். அதை மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா வழிமொழிந்து பேசுகிறார்.  

அப்படியானால் மத்திய, மாநில அரசுகள் தமிழின துரோகிகளா இல்லையா? நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடம் கூட பெற முடியவில்லை என்றால் இதுதான் காரணம். அதற்கு பின் கூட புத்தி வரவில்லையா? அறிவு வரவில்லையா? தேர்தல் தோல்விக்கு பின் தமிழகத்தை சுத்தமாக காலி செய்ய முடிவு செய்துவிட்டனர். குறுவை சாகுபடிக்கு 8 ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்வருடன் பேசினாரா? அமைச்சருடன் பேசினாரா? என்ன செய்தார்? தமிழக முதல்வர் 8 வழிச்சாலையில் காட்டும் அவசரம், ஆர்வம் ஏன் காவிரி பிரச்னையில் வரவில்லை.

8 வழிச்சாலை வந்தால் ரூ3 ஆயிரம் கோடி வரும். காவிரி நீர் வந்தால் கமிஷன் வருமா? லாபத்தை அடிப்படையாக வைத்து தான் ஆட்சியில் இருக்கிறீங்க. காவிரி விவசாயிகளிடம் வசூலித்து பணம் தந்தால் யோசிப்பீங்களோ என்னவோ. எந்த சித்தாந்தமும் இன்றி சர்வாதிகார, எடுபடி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை சமாதானம் செய்து 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவருவேன் என்கிறார். இந்த லட்சணத்தில் நானும் ஒரு விவசாயி என எடப்பாடி சொல்கிறார். விவசாயி எதிர்ப்பை மீறி செயல்படுவது தான் விவசாயியின் வேலையா? பணம் தான் காரணம். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேட்கக்கூட துப்பில்லாத ஆட்சி நடக்கிறது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12ம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அமைப்பு சார்பில் மனிதசங்கிலி போராட்டம் விழுப்புரம் முதல் ராமேஸ்வரம் வரை நடக்கிறது. இதில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் பங்கேற்கும். போராட்டத்துக்கு ஆதரவளிக்கும். ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை பிரச்னையில் எடுபிடி எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. எடுபிடி-எதேச்சதிகார கூட்டணி அரசுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கொடுத்த மரண அடியை இத்தோடு நிறுத்தாமல், இன்னொரு மரண அடியை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தர வேண்டும். நீட் தேர்வுக்கு பலி பீடமாக தமிழகம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு 2, இந்த ஆண்டு 3 மாணவிகள் என தற்கொலை செய்துள்ளனர். மத்திய, மாநல அரசுகள் தான் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம். இப்படிப்பட்ட கொலைபாதக அரசுக்கு முடிவு கட்ட தயாராகுங்கள். வாக்காளர்களுக்கு இதய பூர்வ நன்றி.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து

BalajiJun 11, 2019 - 12:33:52 PM | Posted IP 108.1*****

hydro கார்பன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டதே நம்ம தளபதி தானே.. சரி காங்கிரஸ் ஆட்சில இருக்கும் பொது நம்ம ஊழல் இல்லாத பெருச்சாளி சாரி பெரிய மனுஷன் சிதம்பரம் 3 மொழி திட்டம் கொண்டு வரணும் அதுவும் ஹிந்தி மொழி கட்டாயம் இந்தியா முழுவதும் கொண்டு வரணும் அப்படினு அதுவும் ஹிந்தி ல சொன்ன பொது இவரோட அப்பா தானே கம்முனு இருந்தாரு. அப்போ கம்முனு இருந்துட்டு இப்போ கும்முன்னு எதிர்த்தோம் சொல்றார். சரி போன எலெக்ஷன்ல 39 தோத்து போச்செய் DMK அப்போ எல்லாம் உங்களுக்கு புத்தி எங்க போச்சு. நல்ல டாக்டர் போய் பார்க்க சொல்லுங்கப்பா. ஊழல் பத்தி இவரு பேசுறாரு,.. ஹா ஹா ஹா இது வடிவேலு காமடி விட சிறப்பு. ஆனா ஒன்னு.. தமிழன சொல்லணும்.. வோட் போட்டு ஜெயிக்க வச்சான்ல.. அதுக்கு இந்த மாதுரி fraud பேச்சு எல்லாம் கேட்டு தான் ஆகணும். வாழ்க தமிழ்..(இத தளபதி மகள் ஸ்கூல் சொல்லி இருந்த 500 rupees பைன் வேறயாமே).. எதுக்கு வம்பு நம்ம எல்லா தமிழன போலையும் ஹிந்தி ஒழிக அண்ட் பிஜேபி ஒழிக சொல்லிட்டு கம்பிரமா இருப்போம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory