» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிசிடிவி மூலம் கண்காணிப்பு: ஹெல்மெட் அணியாமல் சென்றால் வீடு தேடி வரும் அபராத ரசீது!!

வெள்ளி 14, ஜூன் 2019 10:29:57 AM (IST)

மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வாகன ஓட்டிகளின் வீட்டிற்கே அபராத ரசீது வினியோகிக்கப்படுகிறது.

சென்னை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் துறையின் 3-வது கண் என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் தீவிர முயற்சியால் சென்னை நகரம் இன்று கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் பல வழக்குகள் துப்பு துலக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்.

குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் கைக்கொடுத்த சி.சி.டி.வி. கேமராக்கள் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளையும் போலீசாரிடம் காட்டி கொடுத்தது. அதனடிப்படையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டது. தற்போது மோட்டார் சைக்கிளில் செல்வோர்கள் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. எனினும் சிலர் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வதை விரும்புவது இல்லை. எனவே போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு, ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை மடக்கி பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

எனினும் போக்குவரத்து போலீசார் நிற்பதை தூரத்தில் கவனிக்கும் வாகன ஓட்டிகள் வேறு வழியாக சென்று விடுகிறார்கள். ஒரு சிலர் தலையில் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட்டை வைத்து செல்கிறார்கள். போலீசாரை பார்த்ததும் தலையில் மாட்டிக்கொள்கிறார்கள். பின்னர் மீண்டும் தலையில் இருந்து எடுத்து விடுகிறார்கள். ஆனால் இனி மேல் இது போன்று போக்குவரத்து போலீசாரை யாரும் ஏமாற்ற முடியாது.நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் கண்காணிக்க தொடங்கி உள்ளனர். ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்டு, வாகன எண்ணும் பதிவு செய்யப்படுகிறது. வாகன எண் அடிப்படையில் அவர்களது வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவர்களுக்கு தபால் மூலம் அபராத ரசீது அனுப்பப்படுகிறது. இந்த அபராத தொகையை அருகில் உள்ள இ-சேவை மையத்தில் செலுத்த வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு வந்து மின்னணு பண பரிவர்த்தனை மூலம் அபராத தொகையை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்த தவறினால் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாநகர் சிக்னலில் பெண் போலீசாரின் ‘ஆடியோ’ குரல் பதிவு கடந்த சில மாதங்களாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘ஹெல்மெட்’ அணியாமல், சிக்னலில் நிற்காமல் போன்ற சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பட்டு வருகிறீர்கள். வாகன எண் மூலம் வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பப்படும்’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அண்ணாநகர் போக்குவரத்து மண்டலத்தில் சாலை விதிகளை மீறியதாக 90 ஆயிரம் வாகன ஓட்டிகளின் வீட்டு முகவரிக்கு அபராத ரசீது அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory