» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

வெள்ளி 14, ஜூன் 2019 11:15:08 AM (IST)அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
 
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் அவர்களின் விருப்பத்தின்படி இந்த அடையாள அட்டையை வடிவமைத்து வழங்குகின்றன. இதற்காக மாணவர்களிடம் இருந்து சிறிய தொகையும் பெறப்படுகிறது.  இதையடுத்து இதேபோன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்,  அந்த அட்டை மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகளை புகுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. 

இந்தத் திட்டத்துக்கான முயற்சிகள் கடந்த 2011-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டாலும் மாணவ, மாணவிகளின் தகவல்களைச் சேகரிப்பது,  மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்ற மாணவர்களின் பெயர்களை நீக்குவது,  திரட்டப்பட்ட தகவல்களை பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என தொடர் பணிகளாலும், இடையிடையே ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் செலவில் மாணவர்களின் சுயவிவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவ,  மாணவிகளுக்கு  வழங்குவதற்கு அடையாளமாக முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் 7 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளை  வழங்கி திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,  இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்மார்ட் அட்டை சிறப்பம்சங்கள்:  

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்மார்ட்  அட்டையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது.  இது தவிர கியூ-ஆர் கோடு என்று சொல்லக்கூடிய நவீன தொழில்நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இதன் மூலம் வலைதளங்களிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory