» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

ஞாயிறு 16, ஜூன் 2019 9:54:34 AM (IST)நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை விடுத்து உள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோதாவரி-கிருஷ்ணா- பெண்ணாறு-பாலாறு- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தினை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டேன். கங்கை சீரமைப்பு திட்டம் போன்று காவிரி ஆற்றினை சீரமைக்க மத்திய அரசு ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தினை செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.

காவிரி வடிநிலத்தின் ஒன்பது பாசன அமைப்புகளையும் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை (17,600 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில்) தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்த தொழில்நுட்ப பொருளாதார மற்றும் முதலீட்டு அனுமதி வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த தேவையான அனுமதிகளை வழங்கிட வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை உருவாக்கிடவும், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுத்திட பழமையான நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், தேவையான நிதியினை அளித்திட வேண்டும். தமிழ்நாட்டின் கருத்துக்களை கேட்டு, நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வரை, அணைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மின்சார திருத்த மசோதா 2014-ஐ சட்டமாக இயற்ற மத்திய அரசு மேலும் நடவடிக்கைகளை தொடரக் கூடாது. மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின்னர் தான், மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதா 2017-ஐ சட்டமாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தகுந்த பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்டத்தினை தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு கூட்டு பங்களிப்பு திட்டமாக அனுமதிக்க வேண்டும். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையத்தினை சேலம் இரும்பு ஆலை வளாகத்தில் உள்ள காலியிடத்தில் அமைக்க வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு விமான சேவையினை தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விரைந்து நில மாற்றம் செய்ய வேண்டும். 14-வது நிதிக் குழுவில் நிதி பெறுவதில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யும் விதத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு உதவி அளித்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கான செயல்முறை மானியம் மற்றும் 2018-19 ஆம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) இழப்பீட்டு நிலுவைத் தொகை 940 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி(ஐ.ஜி.எஸ்.டி.) நிலுவைத் தொகை 4,459 கோடி ரூபாயும் விரைந்து வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதி மற்றும் மானிய நிலுவைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களின் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும். பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு திட்ட அறிக்கைகளுக்கு உரிய அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் தமிழக கடலோர மாவட்டங்களில் மின் வினியோகத்தினை பூமிக்கடியில் பதித்து வினியோகம் செய்யத் தேவையான 7,000 கோடி ரூபாய் நிதி வழங்கிட வேண்டும். ஏழை எளியோருக்கு 8 லட்சம் வீடுகள் வழங்கவும், குறிப்பாக, கஜா புயலினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டவும் சிறப்பு அனுமதி வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி 7,000 கோடி ரூபாய் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போகும் தருணத்தில் அவர்களை மீட்கும் பொருட்டு ஹெலிகாப்டர் தளம் அடங்கிய இந்திய கடற்படை தளம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு பிரதமர் மோடியிடம் நான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.

தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு குறிப்பாக பேரூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதி உதவி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் கருதி இனி மருத்துவ மாணவ சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வினை தொடராமல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

விவசாய விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விவசாய பெருமக்கள் சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் விதமாக, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு தற்போது 10 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி உதவியினை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

"மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது"

"மேகதாது திட்டத்தை அனுமதிக்க கூடாது" என நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். டில்லி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory