» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய வேண்டும் : எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகார்

திங்கள் 17, ஜூன் 2019 5:57:43 PM (IST)

எழுத்தாளர் ஜெயமோகனை கைது செய்ய கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் செய்துள்ளனர்.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார். இவர்  2.0,  சர்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார்.இவர் கடந்த 14-ந் தேதி இரவு பார்வதிபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தோசை மாவு வாங்கினார். அந்த மாவு புளித்துப்போய் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஜெயமோகன், மளிகைக்கடைக்கு வந்து அந்த தோசை மாவு பாக்கெட்டை திருப்பிக் கொடுத்தார்.

அப்போது ஜெயமோகனுக்கும், கடை உரிமையாளர் செல்வத்துக்கும் (51) மோதல் ஏற்பட்டதாம். இதுதொடர்பாக ஜெயமோகன், வடசேரி போலீஸ் நிலையத்தில் கடைக்காரர் செல்வம் மீது புகார் செய்தார். அதுமட்டுமல்லாமல் செல்வம் தாக்கியதில் தான் காயம் அடைந்ததாக கூறி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் செய்துள்ளனர். நாகர்கோவிலில் எஸ்பி ஸ்ரீநாத்தை சந்தித்து வியாபாரிகள் அந்த மனுவை கொடுத்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பார்வதிபுரத்தில் வியாபாரம் செய்து வரும் செல்வத்தின் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் கடந்த 14-ந் தேதி 2 பாக்கெட் தோசை வாங்கிச் சென்றுள்ளார். பிறகு மாவு புளிக்கிறது என்று கூறி அதனை திருப்பிக் கொடுக்க அவர் சென்றபோது செல்வத்தின் மனைவி கீதா அங்கிருந்துள்ளார்.அவரிடம் ஜெயமோகன் தகாத முறையில் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் மாவு பாக்கெட்டையும் அவரது முகத்தில் வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வம் அதை தட்டிக்கேட்டபோது அவரையும் ஜெயமோகன் தாக்கி இருக்கிறார். 

தவறை மறைப்பதற்காக ஜெயமோகன் போலீசில் புகார் செய்துள்ளார். ஜெயமோகன் மீது கீதா கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை. எனவே அந்த புகாரை விசாரித்து ஜெயமோகனை கைது செய்ய வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வத்துக்கும், அவரது மனைவி கீதாவுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிJun 18, 2019 - 09:22:08 AM | Posted IP 162.1*****

எதுக்கு சார் - உங்க கடையில தோசை மாவு வாங்கினதுக்கா ?

உண்மைJun 17, 2019 - 07:01:33 PM | Posted IP 162.1*****

கெட்டுப்போன மாவை வித்தவனுக்கு இவ்வளவு வக்காலத்தா..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory