» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

புதன் 19, ஜூன் 2019 9:04:01 AM (IST)

நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து நீரை எடுத்து விநியோகித்தபோதும், தட்டுப்பாடு பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஓரிரு நாள்களில் பிரச்னையின் தீவிரம் உச்சத்தை அடைந்துள்ளது.  இன்று ஆலோசனை: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்துகிறார். காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இதனிடையே, சென்னை மெரீனாவில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைத்து அதிகாரிகளையும் அழைத்து திங்கள்கிழமை ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இயற்கை பொய்த்து விட்டது. பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. நிலத்தடி நீரும் கீழே சென்று விட்டது.குடிநீரைப் பொருத்தவரை, தொடர்ந்து லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வட மாவட்டங்களில் பருவமழையானது அக்டோபர், நவம்பரில்தான் தொடங்கும். எனவே, மூன்று, நான்கு மாதங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.   இதைக் கருத்தில் கொண்டு, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலமாக நீரினை எடுத்து மக்களுக்குக் கொடுத்து வருகிறோம். இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசின் பணிகளுக்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் துணை நிற்க வேண்டும். ஒரு இடத்தில் உள்ள பிரச்னையை தமிழகம் முழுவதும் உள்ள பிரச்னையாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி பூதாகரமாக்க வேண்டாம். தமிழகத்தில் எந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இயற்கை பொய்த்து விட்டது.   

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு விட்டன. தமிழகத்துக்கு வரும்  கிருஷ்ணா நீரும் 2 டி.எம்.சி. மட்டுமே அளிக்கப்பட்டது. 12 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். கண்டலேறுவில் 8.5 டி.எம்.சி., நீர் இருந்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், அங்கு 4.5 டி.எம்.சி., தான் உள்ளது. அங்கிருந்தும் தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது. மேட்டூரில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலம் நீரைக் கொடுத்து கொண்டு இருக்கிறோம். தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து தண்ணீரை மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory