» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் வேலுமணி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

புதன் 19, ஜூன் 2019 5:17:30 PM (IST)

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமீபகாலமாக மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சால்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது.

செங்குன்றம் ஏரியில் தண்ணீர் குறைவது முன்பே தெரியாதா ? தமிழக அரசிடம் நீர் மேலாண்மை திட்டமே இல்லை, தமிழகத்தில் எந்த நீர்நிலைகளிலும் தூர் வாரப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி இருக்குமேயானால் உடனடியாக பதவியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி நாள்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து புதிய வியாக்யானங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ.15 ஆயிரத்து 838 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் ரூ.2638 கோடியும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.5346 கோடியும், சென்னை தவிர்த்து பிற மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.4440 கோடியும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வளவு தொகை செலவழித்த பிறகும் ஒரு சொட்டு தண்ணீர் கூட புதிதாக இவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றுச் சொன்னால் செலவழிக்கப்பட்ட தொகை என்ன ஆனது ? நீர் ஆதாரங்களை பெருக்குவதற்காக திட்டப் பணிகளுக்கு நிதி செலவழிக் கப்பட்டதா ? அப்படி நிதி செலவழிக்கப்பட்டிருந்தால் நீர் ஆதாரங்கள் ஏன் பெருக வில்லை ? கடந்த 2015ல் பெருவெள்ளம், 2016ல் வறட்சி, 2017ல் ஓரளவு மழை, 2018 ஏப்ரலில் தொடங்கிய வறட்சி, தற்போது 2019ல் கடுமையாகி, அனைவரையும் பாதித்து வருகிறது.

குடிநீர் பஞ்சம் என்பது சென்னை மாநகர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களைத் தவிர, 21 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. தமிழகத்தில் உலக வங்கி மூலம் ஏரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 41,127 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சிறுவாணி, ஆழியாறு, பரம்பிக் குளம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, சாத்தனூர் ஆகிய அணைகள் கட்டப்பட்டு நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எந்த புதிய நீர்ப்பாசன திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப் படவில்லை.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிற 600 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகிற 3 லட்சத்து 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீருக்காக அல்லல்படுகிற நிலை ஏற்பட்டு, பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்கிற நிலை ஏற்பட்டு வருகிறது. ஏறத்தாழ 12 நிறுவனங்கள் 5 ஆயிரம் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் பணியாற்றுகிற பணியாளர்கள் குடிநீருக்காக கடும் அவதியை எதிர்கொள் கிறார்கள். ஆனால், இத்தகைய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்கு தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மீஞ்சூர், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைப் போல இன்னும் சில திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் குடிநீர் பிரச்னையை தீர்த்திருக்க முடியும். மூன்றாவது திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சி யினர் தலையீடு காரணமாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சரின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மழையின்மையின் காரணமாக ஏற்படுகிற வறட்சியை எதிர்கொள்வது குறித்த நீர் மேலாண்மையை முன்கூட்டியே திட்டமிட்டுத் தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வறட்சி வந்த பிறகு தீர்வுகாண முற்படுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. தமிழக குடிநீர் பஞ்சத்தை பொறுத்தவரை அதை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இதற்குப் பொறுப்பேற்று குறைந்தபட்சம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனடியாக பதவி விலக வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லையேதவிர, குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சருக்கு பதவி விலகுவதை தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory