» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாட்ஜில் கல்லூரி மாணவி கழுத்தை இறுக்கி கொலை: நாடகமாடிய காதலன் கைது - பரபரப்பு வாக்குமூலம்!!

வியாழன் 11, ஜூலை 2019 4:18:51 PM (IST)

சென்னையில் லாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, காதலனே கொலை செய்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து காதலனை போலீசார் கைது செய்தனர். 

சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமர் சிங்(23). இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது காதலி காஜல்(21) என்பவருடன் சேப்பாக்கம் மியான்சாகிப் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த ஜூன் 10ம் தேதி இரவு அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் மறுநாள் காலை லாட்ஜ் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய வந்தனர். அப்போது அறையின் கதவை பல முறை தட்டியும் திறக்கவில்லை. லாட்ஜ் மேலாளர் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி திருவல்லிக்கேணி போலீசார் லாட்ஜிக்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது, காதலர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். 

இருவரையும் சோதித்த போது, காஜல் இறந்தது தெரியவந்தது. காதலன் சுமர் சிங் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை விஷமுறிவு சிகிச்சை பிரிவில் போலீசார் அனுமதித்தனர். பிறகு காஜல் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந்த காதலி காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ‘விஷம் குடித்ததால் பெண் இறக்கவில்லை என்றும், கழுத்தை பலமாக இறுக்கி மூச்சு திணறடித்து துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்திருந்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஜலின் காதலன் சுமர் சிங்கிடம் தனது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.விசாரணையில் சுமர்சிங் தனது காதலியை துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் சுமர் சிங்கை நேற்று கைது செய்தனர்.விசாரணையின் போது தனது காதலியை கொலை செய்தது பற்றி காதலன் சுமர் சிங் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:  காஜல் வசதியான பெண் என்பதால் சுமர் சிங்கிற்கு அதிகளவில் பணம் செலவு செய்துள்ளார். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் கடந்த 2 ஆண்டுகளாக வெளியே சுற்றி வந்தனர். அதேபோல் பல நேரங்களில் லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  

காஜல் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் காஜலை கல்லூரிக்கு அனுப்பாமல் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதுகுறித்த தனது காதலன் சுமர் சிங்கிற்கு போன் மூலம் காஜல் தகவல் தெரிவித்தார். பின்னர் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் சந்தித்தும் போன் மூலமும் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் சுமர் சிங் தனது காதலியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பல முறை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வந்த காஜல், ஒரு நிலையில் காதலன் மீது வெறுப்பு வந்தது. இதனால் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து சந்தோசமாக இருக்கலாம் என்று முடிவு செய்து தனது காதலனுடன் பேசுவதை துண்டிக்க ஆரம்பித்தார். இது சுமர் சிங்கிற்கு பிடிக்க வில்லை. 

கடைசியாக கடந்த ஜூன் 10ம் தேதி காதலிக்கு போன் செய்து உன்னை நான் இனி தொந்தரவு செய்ய மாட்டேன். கடைசியாக உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துள்ளார். கடைசி முறை என்பதால் காஜல் காதலனுடன் அன்று மாலை லாட்ஜிக்கு சென்றார். அப்போது சுமர் சிங் குளிர்பானத்தில் ஏற்கனவே திட்டமிட்டப்படி விஷம் கலந்து கொண்டு வந்துள்ளார். இருவரும் அறையில் ஒன்றாக இருந்து விட்டு, பின்னர் சிறிது நேரம் பேசியுள்ளனர். அப்போது, சுமர் சிங் விஷம் கலந்து குளிர்பானத்தை தனது காதலிக்கு கொடுத்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் காஜலுக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட்டது.

உடனே காஜல் குளிர் பானத்தில் என்ன கலந்து இருந்தாய் தொண்டை எரிச்சலாக இருக்கிறதே என்று கூறியபடி சத்தம் போட்டுவிட்டு அறையை விட்டு வெளியேற முயன்றார். அப்போது சுமர் சிங் ‘என்னை காதலித்து விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்ய போகிறாயா.... எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறி அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொடூரமாக தனது காதலியை கொலை செய்துள்ளார்.  பின்னர் எப்படியும் போலீசாரிடம் தான் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போல் காதலியை தனது அருகில் படுக்க வைத்துவிட்டு விஷம் கலந்து குளிர்பானத்தை தானும் குடித்து சுமர் சிங் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இவ்வாறு சுமர் சிங் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jul 12, 2019 - 02:44:04 PM | Posted IP 210.1*****

இவனை மாதிரி ஆளுங்க தமிழ்நாட்டுல அதிகம். வெளிய தெரியாம நடத்துவானுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory