» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் : சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய் 16, ஜூலை 2019 10:33:47 AM (IST)

காவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், பொதுப் பணித்துறை, பாசனம் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு (திருச்சி மேற்கு) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

கே.என்.நேரு (தி.மு.க.):- கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது, சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் போய் கலந்தது. அதேநேரத்தில் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. இந்த தண்ணீரை கொள்ளிடம் வழியாக திருப்புங்கள் என்று நான் கூறினேன். ஆனால் அதிகாரிகள் அதை செய்யவில்லை. முக்கொம்பில் தடுப்பணை கட்டும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-உங்கள் ஆட்சியிலும் உபரியாக தான் தண்ணீர் கடலில் போய் கலந்தது. இருப்பினும் உபரி நீரை தேக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கே.என்.நேரு (தி.மு.க.):- தஞ்சை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு இருந்தால் ஏரி, குளங்களில் தண்ணீரை அதிகமாக சேமித்து வைத்திருக்க முடியும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எல்லா பகுதிகளிலும் தூர்வாரியிருக்கிறோம். தஞ்சையை பொறுத்தவரையில் கால்வாய்கள் நீளம் அதிகம். இருந்தாலும் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

3 தடுப்பணைகள் கட்டப்படும்

நீங்கள் சொல்வது போல, 100 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியாது. ஏனென்றால் சமவெளியில் தண்ணீர் ஓடுவதால் தடுப்பணை கட்டினால் அருகில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கும். அவர்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே இயன்ற அளவு காவிரியில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணை கட்ட அரசு முயற்சிக்கும். அந்தவகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணை கட்டப்படும்.

திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு கதவணையின் மூலம் 0.25 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை கதவணையின் மூலம் 0.83 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்ட கட்டமைப்புகள் மூலம் 6.27 டி.எம்.சி. வெள்ள மிகைநீர் சேமிக்கப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே ஆதனூர்-குமாரமங்கலம் என்ற இடத்தில் கதவணை அமைக்க ரூ.428 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 0.32 டி.எம்.சி. வெள்ள மிகைநீர் சேமிக்கப்படும்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே நஞ்சை புளூர் கிராமத்தில் காவிரியின் குறுக்கே கதவணை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விவர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 0.5 டி.எம்.சி. வெள்ள மிகை நீரை சேமிக்க இயலும். மேலும் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே கதவணை அமைக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 5 கதவணைகள் கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் 1.80 டி.எம்.சி. வெள்ளநீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கே.என்.நேரு (தி.மு.க.):- இந்த ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுங்கள். ஏனென்றால் தஞ்சை பகுதி மக்கள் தமிழகத்திற்கே சோறு போடுகிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தவிர வேறு எந்த தொழிலையும், செய்வதில்லை. எனவே கடைபகுதி வரை தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுங்கள்.

தெலுங்கானாவில் பாசனத்திற்காக அதிக நிதியை ஒதுக்குகிறார்கள். நாம் நீர் மேலாண்மைக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் யார்-யாரெல்லாம் குடிமராமத்து பணி உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-நீர் மேலாண்மையை அதிகப்படுத்த தான் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். மழைநீரை சேமித்து, நீர் பயன்பாட்டை முறைப்படுத்தி, நீர் நிலையை மீட்டெடுத்து, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்க உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம்.

துரைமுருகன்:-குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள். எந்த ஏரிகள் எல்லாம் தூர்வாரப்பட்டது. உங்களால் லிஸ்ட் கொடுக்க முடியுமா? ஏனென்றால் எங்கெங்கு ஏரிகள் இருக்கிறது, எவற்றை தூர்வார வேண்டும் என்பது எம்.எல்.ஏ.க்களுக்கு தான் தெரியும். ஆனால் எங்களை ஏன் அழைக்கவில்லை?. பணிகள் நடக்கும்போது எங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-யாருடைய தலையீடும் இல்லாமல் குடிமராமத்து பணிகள் நடக்கிறது. ஒரு ஏரியை சீரமைக்க எவ்வளவு தேவை என்பதை அறிந்து, அதற்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. அதனை அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்கிறார்கள். இதன் விவரங்கள் இணையதளத்திலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அரசியல் தலையீடு இந்த பணிகளில் கிடையாது. முழுக்க முழுக்க விவசாயிகளை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

துரைமுருகன்:- நானும் விவசாயி தான். எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபோன்ற திட்டம் நடைபெறும்போது தெரியப்படுத்துங்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-இந்த திட்டம் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் எந்த பாரபட்சமும் இல்லை. தவறு நடந்தால் சுட்டிக்காட்டுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள விவசாய சங்கத்தினை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கத்தில் உரிய ஏரியினால் பயனடையும் விவசாயிகள் 51 சதவீதம் அல்லது அதற்கு மேலாகவோ, உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட விவசாய சங்கத்திற்கு மட்டுமே குடிமராமத்து பணிகள் வழங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory