» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சரவணபவன் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

செவ்வாய் 16, ஜூலை 2019 12:14:23 PM (IST)

சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று கூறி, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று அவர் அளித்த அறிக்கையில், தற்போது ராஜகோபாலன் இருக்கும் உடல்நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கவலைக்கிடமாக உள்ள ராஜகோபாலை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என்றாலும், உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கினார். மேலும், போலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற சிறைத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, சிகிச்சை செலவு என அனைத்துக்கும் மகன்தான் தான் பொறுப்பு என்றும் கூறிவிட்டனர்.

கொலை வழக்கில் ஆயுள்தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், மர்ம நபர்களால் கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீஸார் சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2004-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ராஜகோபால் உள்ளிட்டோருக்கு தண்டனையை அதிகரிக்கக் கோரி போலீஸார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹோட்டல் அதிபர் ராஜகோபால், மேலாளர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி விசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலு மற்றும் ஜனர்த்தனன் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து கடந்த 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இந்தத் தண்டனையை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தவிர 9 பேர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) சரணடைந்தனர். 

மேலும், உடல்நலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கோரி ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் தாக்கல் செய்த மனுக்களை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.  நீதிமன்றத்தில் சரண் அடைய சரவணபவன் அதிபர் ராஜகோபால், பணியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்துக்கு வந்து சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ராஜகோபால், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன் முன் ஆஜராகி சரண் அடைந்தனர். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட நீதிபதி, இருவரையும்  சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory