» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலூரை வெற்றி கோட்டையாக்கிட உழைத்திடுவீர் : தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

செவ்வாய் 23, ஜூலை 2019 10:57:52 AM (IST)

வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர் என்று தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு பழிபோட்டு முடக்கப்பட்டது தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வை குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அது டெங்கு காய்ச்சல் தொற்று போல பரவி பாதிக்கும் என நினைத்து மத்திய, மாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தை கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தம்.

இதில், தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்களே நன்கு அறிவார்கள். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து, தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று, இந்திய துணை கண்டத்தையே தெற்கு நோக்கி திராவிட இயக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதான், சதிகளை முறியடித்து மூலையில்போட்ட நமது சாதனை வரலாறு.

வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? யாமறியோம் பராபரமே என்ற பூஜை தான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றை தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியை கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.

இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயக முறையில் மாற்றிக்காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.

தி.மு.க. சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் கதிர் ஆனந்த் களம் காண்கிறார். வேலூர் மக்களவை தொகுதிக்கு முழுமையாகவும் அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் கழகத்தின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்கின்ற மக்கள் விரோத ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, அதிகார பலத்தாலும் துஷ்பிரயோகத்தாலும் வெற்றிபெற்று விடலாம் என்ற நப்பாசையுடன், மோசடி வழிகளை முக்காடு போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். தி.மு.க. மீது மீண்டும் ஏதாவது அவதூறுகளை பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மை பணி. வேலூர் தேர்தல் களத்தில் செயலாற்றும் தி.மு.க. வினர் அனைவரும் அவரவர் பகுதிக்குரிய பொறுப்பாளர்களுடன் இணைந்து நின்று, ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குகள் உதயசூரியனுக்கே என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆளுந்தரப்பின் அதிகார பலத்தையும் பணபலத்தையும் கபட நாடக பலத்தையும் எதிர்கொள்ள நம்மிடம் இருப்பது, ஆர்வம் மிகுந்த செயல்பலம் தான். கருணாநிதி நம்மை அதற்கேற்றவாறு நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறார்.

37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்டு 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியை பறித்து, கருணாநிதி தங்கத்திருவடியில் காணிக்கையாக்கிடுவீர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

BalajiJul 23, 2019 - 01:16:33 PM | Posted IP 162.1*****

யாருங்கப்பா பகுத்தறிவு கூடமா.. வெற்றியா எங்க போடணும் செத்த மனுஷன் காலுலயா போடணும்.... சூப்பர்...

துரைமுருகன் ராக்ஸ்Jul 23, 2019 - 11:20:14 AM | Posted IP 162.1*****

கோட்டையாவது .. கொ*டையாவது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory