» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி - ஊட்டி மக்களுக்கு உரிய இழப்பீடு : சீமான் வலியுறுத்தல்

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 4:05:59 PM (IST)கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள  நீலகிரி - ஊட்டி  மக்களுக்கு உரிய இழப்பீடும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்க வேண்டும் என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று 15-08-2019 வியாழக்கிழமை நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள குருத்துகுளி, கப்பதொரை, மு.பாலாடா, கல்லகொரை ஆடா, வினோபஜ் நகர், இத்தலார்  உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து இன்றும் கூடலூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார் சீமான்.நேற்றைய மக்கள் சந்திப்பிற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், வெள்ளப்பாதிப்புகள் குறித்து கூறுகையில், ஆறு ஏரி குளம் போன்ற நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரியிருந்தால் மழைவெள்ளம் கரை உடைத்து வெளியேறி இருக்காது; இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டிருக்காது. சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் முட்டைகோஸ், பீட்ருட், காரட் போன்ற தோட்டங்கள் வெள்ளத்தால் அழிந்துபோயுள்ளது.. ஏறக்குறைய பத்து கிலோமீட்டருக்கும் மேல் நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இழப்பீடு வழங்கும்போது அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், யார் பட்டா வைத்து உள்ளார்களோ அவர்களுக்குத்தான் இழப்பீடு என்பது சரியாக இருக்காது நிலமற்றவர்களும் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவாசாயம் செய்துள்ளனர்; அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிகாரிகள் ஆராய்ந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் ஆறு குடும்பங்களில் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது ஊட்டி அருகேயுள்ள குருத்துகுளி என்ற கிராமம் வழியாகப் பாயும் காட்டாற்றில் சிக்‍கி விமலா, சுசிலா ஆகிய பெண்கள் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரின் வருமானம்தான் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளது. இச்செய்தி அக்குடும்பத்தினருக்கு ஆகப்பெருந்துயரம் எனவே அந்தக் குடும்பத்தில் படித்த இளைஞர் இரண்டு பேர் இருக்கிறாகள் அவர்களில் ஒருவருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இரண்டு கரைகளை ஒட்டியுள்ள வீடுகளிலும் சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பதினைந்து அடி உயரத்திற்கு மேலாக மண் நிரம்பியுள்ளது. இதனைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மூலம் உடனடியாக உதவும்படி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். 

இனி வரும் காலங்களில் இதுபோன்று பாதிப்பு ஏற்படாமலிருக்கத் தமிழக அரசு உடனடியாக, தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளையும், நீர் வழிந்தோடும் பாதைகளையும் தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு என்பது எந்திரமாகச் செயற்படக்கூடாது. இரக்க குணம் கொண்ட தாயுள்ளம் கொண்டாதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே இருக்கின்ற அரசு தேர்தல் வரும் போது மட்டும் அந்தத் தொகுதி பிரச்சினைகளை வேகவேகமாகச் சரிசெய்வதுபோல் முனைப்பு காட்டுகிறார்கள். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். நாம் அனைவரும் இப்போது செய்ய வேண்டியது கட்சி பாகுபாடின்றிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமே. சமீபத்தில் கேரளாவில் வெள்ளப் பாதிப்புக்குள்ளானபோது ராகுல்காந்தி சென்று பார்வையிட்டார். 

அதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் உதவி செய்தாலும் மகிழ்ச்சியே. மக்களைச் சந்திக்கும்போது எங்களிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை, "இந்தப் பாதைகளைச் சரி செய்து கொடுங்கள்” என்று தான். இப்பகுதி நாம் தமிழர் உறவுகள் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்தளவு சரி செய்யப்போகிறோம். அது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவைகளான அரசி, பருப்பு, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களையும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பாய், உடை போர்வை உள்ளிட்ட பொருட்களையும் மட்டுமே அதிகாரமில்லாத எளிய பிள்ளைகள் எங்களால் இயன்றளவு வழங்கமுடியும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி இத்துயரில் இருந்து முழுவதுமாக மீட்க முடியும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory