» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது: தமிழக அரசு

புதன் 21, ஆகஸ்ட் 2019 8:29:16 AM (IST)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நளினி மட்டும் ஒரு மாத பரோலில் தற்போது வெளியில் வந்துள்ளார். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர் ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து, ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இதையடுத்து, நளினி மற்றொரு மனு தாக்கல் செய்தார். அதில், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது அமைச்சரவை தீர்மானத்தின்படி என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, நியமன பதவியில் உள்ள ஆளுநரை கேள்வி கேட்க முடியும். எனவே, அனுப்பிய தீர்மானத்துக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை? என்று ஆளுநரிடம், தமிழக அரசு கேள்வி கேட்க முடியும். அவ்வாறு கேட்கவில்லை என்றால், தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்று அர்த்தமாகி விடும்’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன், ‘அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரத்தை வழங்கி உள்ளது. அதில் மாநில அரசு தலையிட முடியாது. ஆளுநரிடம் கேள்வி கேட்கவோ?, விளக்கம் கேட்கவோ? முடியாது. இதுதொடர்பாக கடிதம் மட்டுமே அனுப்ப முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory