» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது போக்சோ வழக்குப்பதிவு!!

புதன் 21, ஆகஸ்ட் 2019 8:34:59 AM (IST)

மகளுடன், கணவர் பாலியல் தொடர்பு வைத்துள்ளதாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர்கள் பாபு-கலா. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). கணவன், மனைவியான இவர்களுக்கு, கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 11 மற்றும் ஒன்றரை வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இரு மகள்களுடன், பாபு தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் கலா ஒரு பகீர் புகாரை கொடுத்தார். அதில், ‘11 வயது மகளுடன், என் கணவர் பாலியல் தொடர்பு வைத்துள்ளார். இதை பார்த்த நான், கணவரை கடுமையாக கண்டித்தேன். 

ஒரு கட்டத்தில் என் மகள் கர்ப்பம் அடைந்தாள். அந்த கருவை மருந்து கொடுத்து கலைத்து விட்டேன். என் கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாபு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இரு மகள்களையும் அரசு காப்பகத்தில் அடைத்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாபு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இது ஒரு துரதிருஷ்டவசமான வழக்கு. கணவரை பழிவாங்க, பெற்ற மகளை கற்பழித்தார் என்ற பயங்கரமான குற்றச்சாட்டை கணவர் மீது மனைவி சுமத்தியுள்ளார். ஏற்கனவே, இந்த வழக்கில் பாபு முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அவரது மகள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தன் தாயார் பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். அதனால், பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

அதனால், மனுதாரரின் 11 வயது மகள், எழும்பூர் கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதியிடம் அளித்து வாக்குமூலத்தை வாங்கி படித்து பார்த்தேன். அதில், அந்த சிறுமி முழு கதையையும் சொல்லியுள்ளார். தானும், தன் தங்கையும் தந்தையுடன் வசிப்பதாகவும், தங்களை தந்தையிடம் இருந்து பிரித்து, தன்னுடன் அழைத்து செல்வதற்காக இப்படி ஒரு பொய் புகாரை தாயார் கொடுத்துள்ளதாகவும், தானும், தன் தங்கையும் தந்தையுடன் வாழவே விரும்புவதாக தெளிவாகவும் அவள் கூறியுள்ளார்.

ஆனாலும், இந்த வாக்குமூலத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், அந்த சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தேன். எழும்பூர் நீதிபதியிடம் வாக்குமூலத்தில் என்ன கூறினாரோ, அதைதான் என்னிடமும் கூறினார்.இந்த வழக்கு என்னுடைய (நீதிபதியுடைய) மனசாட்சியையே உலுக்கிவிட்டது. மகள்களை தன்னுடன் அழைத்து செல்வதற்காக, பெற்ற மகளுடன், கணவர் பாலியல் உறவு வைத்துள்ளார் என்று புகார் செய்யும் அளவுக்கு ஒரு தாய் செல்வாரா? என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆனால், ‘குடும்பநல கோர்ட்டுகளில் கணவரை பழிவாங்க இதுபோன்ற கீழ்த்தரமான புகார்கள் கொடுக்கப்படுகின்றன என்று என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் இதை நம்பவில்லை. ஆனால், அவையெல்லாம் உண்மை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது. போக்சோ சட்டத்தை எந்த அளவுக்கு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்? என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, மனுதாரர் பாபு மீதான இந்த போக்சோ வழக்கு ஒரு நொடி பொழுது கூட தொடரக்கூடாது. தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து சிறிது கூட கவலைப்படாமல், தன் கணவருக்கு எதிராக மனைவி ஒரு கேவலமான புகாரை கொடுத்துள்ளார். இது ஒரு மோசமான நடவடிக்கை. இது தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இப்படி ஒரு பொய் புகாரை கொடுத்த கலா, அதற்குரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டும். பொய் புகார் கொடுத்த கலா மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும். எனவே, மனுதாரர் பாபுவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்டத்தை ரத்து செய்கிறேன். கலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

நிஹாAug 22, 2019 - 06:01:08 PM | Posted IP 173.2*****

அதி கேவலமான நாட்களை நாம் கடந்துகொண்டிருக்கிறோம்.

சிட்டிஸ்ஸின்Aug 22, 2019 - 01:15:43 PM | Posted IP 108.1*****

அட்வொகேட்டுக்கு என்ன தண்டனைனு யுவர் ஆனார் ???

CITIZENAug 22, 2019 - 01:10:29 PM | Posted IP 108.1*****

Entha case admit panna advocate ku enna thandanai your honor?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory