» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கினர்

சனி 24, ஆகஸ்ட் 2019 10:43:49 AM (IST)

மதுரை மேலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தாயும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டியை சேர்ந்தவர் ராகவானந்தம். இவருடைய மனைவி ரஞ்சிதா (27). இவர்களுக்கு கிரிபாலன் (9), பார்கவி (7), யுவராஜ் (5) ஆகிய குழந்தைகள் உண்டு. கடந்த 2016-ம் ஆண்டு ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை பார்த்தார். இதற்கிடையே ரஞ்சிதாவுக்கும், அரிட்டாபட்டியை சேர்ந்த கல்யாண்குமார்(30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததாக கருதிய ரஞ்சிதா அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு 2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி 3 குழந்தைகளுக்கும் எலிமருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பார்கவி மற்றும் யுவராஜ் ஆகிய 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். துரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிரிபாலன் உயிர் தப்பினான். 

இந்நிலையில் தனது குழந்தைகளுக்கு யாரோ எலி மருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றதாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்து ரஞ்சிதா நாடகமாடியுள்ளார். இதனிடையே தனது குழந்தைகள் இறந்தது குறித்து அறிந்த ராகவானந்தம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது உயிர் பிழைத்த தனது மகன் கிரிபாலனிடம் நடந்தவற்றை கேட்டுள்ளார். அப்போது, ரஞ்சிதாவும், கல்யாண்குமாரும் சேர்ந்து எலிமருந்து தடவிய பிஸ்கட்களை சாப்பிட கொடுத்ததாகவும், அந்த பிஸ்கட்டை சாப்பிட்டபோது கீழே துப்பிவிட்டதால் தான் உயிர் தப்பியதாகவும் கிரிபாலன் கூறியுள்ளான்.

உடனடியாக இதுகுறித்து ராகவானந்தம், அப்போதைய மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரியிடம் புகார் அளித்திருந்தார். ஆனாலும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தனது புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ராகவானந்தம் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி கீழவளவு போலீசார் சந்தேக மரணம் என்ற அந்த வழக்கை 2017-ம் ஆண்டு ரஞ்சிதா மற்றும் கள்ளக்காதலன் கல்யாண்குமார் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து கொலை வழக்காக மாற்றம் செய்தனர். 

அதன் பின்பு இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போதைய மாவட்ட எஸ்பி மணிவண்ணன், நீண்ட நாள் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மேலூர் டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் நேற்றிரவு கீழவளவு போலீசார், மேலூர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரஞ்சிதா மற்றும் கல்யாண்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory