» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.1 கோடி நகைகள் மோசடி - 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேர் கைது

சனி 24, ஆகஸ்ட் 2019 3:57:38 PM (IST)



திருவண்ணாமலையில் தனியார் வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி தொடர்பாக 3 பெண் அதிகாரிகள் உள்பட 7பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவண்ணாமலை சன்னதி தெருவில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் முதுநிலை மேலாளராக சுரேஷ், நகைக்கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக சந்தானஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளராக லாவண்யா, உதவி மேலாளர்களாக தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இந்த வங்கியில் நகைக்கடன் பெற வருபவர்களின் நகையை நகை மதிப்பீட்டாளர்கள் தரம் பார்த்து, மதிப்பீடு செய்து சந்தான ஹரி விக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். பின்னர் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நகைக்கடன் விண்ணப்பம் பூர்த்தி செய்தும், அதனைச் சார்ந்த ஆவணங்களை பெற்றும் வாடிக்கையாளர்களிடம் கையொப்பம் பெற்று கடன் வழங்கிவிட்டு அந்த நகைகளை நகை பையில் வைத்து பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பு அதிகாரிகளான சந்தான ஹரி விக்னேஷ் மற்றும் லாவண்யா ஆகியோர் சேர்ந்து பெட்டக அறைக்குள் எடுத்துச் சென்று பத்திரமாக வைப்பார்கள். 

இந்த வங்கியில் தனிநபருக்கு நகைக்கடன் வழங்கும்போது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மட்டுமே வழங்க வேண்டும்.ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பல நகைக் கடன்களாக ரூ.28 லட்சத்து 70 ஆயிரத்திற்கு விதிமுறைகளுக்கு முரணாக கடன் வழங்கி உள்ளதும், கடந்த மே மாதம் 18-ம் தேதி இந்த பெண்ணின் ஒரு நகைக்கடனை முடித்து விட்டு அந்த பெண்ணிடம் பணிபுரியும் ஒருவருக்கு ஒரு புதிய நகைக்கடனை ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்துக்கு தொடங்கியுள்ளதும் வங்கி உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

மேலும் சில நாட்களில் இந்த கடனை கார்த்திகேயன், மணிகண்டன் மற்றும் சந்தான ஹரி விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து செலுத்தி போலி கையெழுத்து போட்டு கடன் கணக்கை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மே மாத இறுதியில் கோட்ட அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரியும் மணிவண்ணன் என்பவர் திருவண்ணாமலை கிளை வங்கியில் ஆய்வு செய்தார். அப்போது பெட்டக அறையில் 20 தங்க நகை பைகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை சுமார் 3 கிலோ 710 கிராம் ஆகும். அதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் ஆகும்.

தொடர்ந்து நகை பைகள் எவ்வாறு மாயமானது என்று உண்மை விவரத்தினை தெரிந்து கொள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்த பொழுது அதில் பதியப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கண்காணிப்பு கேமரா நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் விழுப்புரம் கோட்டத்தின் முதன்மை மேலாளர் முரளி என்பவர் புகார் மனு அளித்து உள்ளார்.

எஸ்பி சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகைக்கடன் அதிகாரி சந்தான ஹரிவிக்னேஷ், வங்கி செயல் மேலாளர் லாவண்யா, உதவி மேலாளர்கள் தேன்மொழி, இசைவாணி, நகை மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய 7 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory