» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை முதல் விருப்ப மனு: அதிமுக அறிவிப்பு

சனி 21, செப்டம்பர் 2019 4:23:51 PM (IST)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள், நாளை முதல் விருப்ப மனுக்களைப் பெற்று தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். இதையடுத்து, அவர் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மே மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணி, கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில், இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் இரு தினங்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று கட்சி தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என, அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செப்.21) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புபவர்கள், தலைமைக் கழகத்தில் நாளை (செப்.22) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், செப்.23, திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25,000 செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து, அப்படிவங்களை செப்.23 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தவறாமல் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்," என்று அறிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory