» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்

வியாழன் 7, நவம்பர் 2019 10:21:21 AM (IST)

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார். 8-ம் தேதி அமெரிக்கா புறப்படும் அவர், அங்கு தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திரட்டுகிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

இதற்காக 8-ம் தேதி அதிகாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றடைகிறார். 9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 10-ம் தேதி குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019 விழாவில் கலந்துகொள்கிறார். அந்த விழாவில் இண்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் ஆப் தி இயர் - ஆசியா என்ற விருது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுகிறது.

12-ம் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாநில கவர்னர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். மேலும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ்-2019 விழா மற்றும் இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர் சார்பில் நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.

13-ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம் வாஷிங்டன் டி.சி. செல்கிறார். அங்கு அவருக்கு இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க பன்னாட்டு கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14-ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15-ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான எலெக்ட்ரானிக்ஸ் டோனர் போர்டை தொடங்கி வைக்கிறார். 16-ம் தேதி நியூயார்க் சென்று இந்திய-அமெரிக்க கலாசாரம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் உடன் செல்கிறார். 17-ம் தேதி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்புகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 7, 2019 - 10:42:23 AM | Posted IP 173.2*****

அண்ணன் அமெரிக்கா போவாரு டெல்லி போவாரு மோடியை பார்ப்பாரு அமிட்ஷாவை பார்ப்பாரு ஆனா கடைசி வரை இவர் தர்மயுத்தம் நடத்துன அம்மாவின் மர்மமரணத்துக்கு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மட்டும் போகவே மாட்டாரு. அவ்வளவு தொழில்பக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory