» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்ய சட்டத்திருத்தம்? முதல்வர் தலைமையில் ஆலோசனை

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:35:19 PM (IST)

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 7ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் காலநீட்டிப்புக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வணிகவரி நிலுவை தொகையை வசூலிப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த 10 நாளில் மீண்டும் இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்கள்,  தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய  துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அதற்கான முறையான அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள தமிழக உள்ளாட்சி சட்டப்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாக பொதுமக்களே வாக்களித்து தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது. ஆனால், நேரடியாக பொதுமக்களே உள்ளாட்சி தலைவர்களை தேர்வு செய்தால், கூட்டணி கட்சிகளுக்கு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளில் அதிக இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தலா இரண்டு மேயர் சீட்டுகளை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஒரு கட்சிக்கு மேயர் சீட் கொடுத்து விட்டு மற்றொரு கட்சிக்கு கொடுக்காவிட்டால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி அதிகளவில் ஏற்படும்.

இதை சமாளிக்க, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் நடைமுறையை கொண்டு வருவதற்கான சட்டத்திருத்தம் செய்ய இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், கவுன்சிலர்களே மேயரை, நகராட்சி தலைவர்களே தேர்வு செய்யும் நிலை வரும். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு மேயர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியை கொடுக்காமல் சமாளித்து விடலாம் என்று அதிமுக கணக்கு போட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவில்லை. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அனுமதியின் பேரில் உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் செய்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

ராஜாNov 19, 2019 - 05:38:27 PM | Posted IP 108.1*****

ஆளுமை மி்கக தலைவர் என்றால் தனித்து போட்டியிட திராணி இருக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory