» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான செயல்திட்டம்: கொந்தளிக்கும் சீமான்

வெள்ளி 22, நவம்பர் 2019 5:06:05 PM (IST)

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிட முடியும் என்பது தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிக்கிற செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:  உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்திட அனுமதி வேண்டி நீண்டகாலமாக வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருவதென்பது சகிக்க முடியாதப் பெருங்கொடுமை. உயர்நீதிமன்றங்களில் ஏற்கனவே தமிழ் மொழி இல்லாத நிலைமை நீடிக்கிறது. இப்போது எளிய மக்கள் இறுதியான நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை இல்லாமல் ஆக்குகிற வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தொடங்கி இருப்பது என்பது ஏற்கனவே அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான செயல்திட்டமேயாகும்.

தமிழ்மொழி தெரியாமலேயே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆகிவிட முடியும் என்கிற நிலையை உருவாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு நீதிமன்றங்களை தமிழ்மொழி தெரியாத, தமிழர்கள் அல்லாதவர்களின் கையில் ஒப்படைப்பதற்கான பெரும் சதியாகவே இதைக் கருதுகிறேன். அவ்வாறு நடந்தால் சாமானிய மக்கள் தங்களது இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கிற நீதி பரிபாலன முறை முற்றிலுமாகத தகர்க்கப்படும்.

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிடலாம் என்கின்ற வகையில், 2016ல் தமிழக அரசு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் ஆணை பிறப்பித்தது. இந்த TNPSC அறிவிப்பாணை 25/2019யைத் திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் தமிழ்நாடெங்கும் இன்று நடத்துகிற மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, அப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory