» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வரவேற்பு

வெள்ளி 6, டிசம்பர் 2019 4:37:35 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.

இடஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டு மறுவரையறைகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 9 மாவட்டங்களைத் தவிர 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது. மேலும் 9 மாவட்டங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இத்தீர்ப்பு குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதை வரவேற்கிறோம். இத்தீர்ப்பை முழுமையாக ஏற்று உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிமுக ஈடுபடும். உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்று அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறும் வகையில் கடுமையாக உழைப்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுக  வரவேற்பு 

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வார்டு மறுவரையறைகளுக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக வழக்கு தொடரவில்லை. திமுகவின் கோரிக்கையை ஏற்று வார்டு மறுவரையறைகளை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை திமுக வரவேற்கிறது.

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குகிறது அதிமுக அரசு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் தேர்தல் நடந்தால் குளறுபடி ஏற்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory