» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!

சனி 7, டிசம்பர் 2019 4:59:27 PM (IST)

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை காலை சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த நிலையில், தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணை சனிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, வேலூர்,  திருப்பத்தூர்,  ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை சனிக்கிழமை மாலை மீண்டும் வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை மாலை 4:30 மணியளவில் வெளியானது. தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது,

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும். வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் டிச. 09-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் மீதான ஆய்வு 17-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப்பெற 19-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory