» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பித்த தமிழக ஏட்டு

ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:24:57 AM (IST)

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் (42) விண்ணப்பித்துள்ளார்.

நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 

மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. ஆனால் டில்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆள் இல்லை என்ற தகவல் வெளியானது. அதன் காரணமாகவே மரண தண்டனை விதிக்கப்பட்டும் குற்றவாளிகள் இதுவரை தூக்கிலிடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு நான் தயார் என ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திகார் சிறையின் தலைமை இயக்குநருக்கு கடிதமும் அனுப்பி உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக சுபாஷ் சீனிவாசன் பணியாற்றுகிறார்.

அவர் திகார் சிறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்தப் பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். ஏட்டு சுபாஷ் சீனிவாசன் தேவிபட்டினத்தில் பணியாற்றியபோது, அனாதை பிணங்களை அடக்கம் செய்வது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அண்ணா பதக்கம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விருதுகளை பெற்றுள்ளார்.


மக்கள் கருத்து

செந்தில்Dec 10, 2019 - 11:43:11 AM | Posted IP 173.2*****

வாழ்த்துக்கள் அண்ணா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory