» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநில அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு?- மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:32:44 PM (IST)

மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ள மத்திய பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், ரயில்வே தேர்வு வாரியம்  போன்ற அமைப்புகள் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய பாஜக அரசு தற்போது இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் பணியாளர் 

பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சார்பில், 2 டிசம்பர் 2019-ல் ஒரே பொதுத் தகுதித் தேர்வு நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி மத்திய அரசின் குரூப்-பி கெசட்டட் பணிகள், கெசட்டட் அல்லாத குரூப்-பி பணிகள் மற்றும் குரூப்-சி பணி இடங்களுக்கு ஒரே பொதுத் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்படும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு முகவாண்மை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது. நாடுமுழுவதும் பொதுத் தகுதித் தேர்வு எழுதுவோர்களின் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு தர வரிசைப் பட்டியல் உருவாக்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கு மேற்கண்ட தர வரிசைப் பட்டியலில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர்.

மத்திய அரசு உருவாக்கும் முகவாண்மை நிறுவனத்துடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘செட்’ எழுதித் தேர்வு பெற்றவர்களைப் பெறலாம். இனி மாநில அரசுகள் தனியாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மத்திய அரசின் பொது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி; ஒரே குடும்ப அட்டை என்று நாட்டையே ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் பாஜக அரசு, மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். 

மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பும் முறையை ஒழித்துக்கட்டி விட்டு, இனி மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலங்களில் இருந்துகொண்டு வந்து தமிழ்நாட்டில் திணிப்பதற்கான சதித் திட்டத்தை அரங்கேற்றவே இத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வேத்துறை, என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், சுங்கத்துறை உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களிலிருந்து ஊழியர்கள் பணி நியமனம் பெறும் நிலையும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நிலையும் இருப்பதை மாற்ற வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தமிழகம் குரல் எழுப்பி வருகிறது.

ஆனால் மத்திய பாஜக அரசு, ஒரே பொதுத் தகுதித் தேர்வு என்ற பெயரில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைத் தயார் செய்து வருகிறது. பாஜக ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்களின் உள்நோக்கத்தை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வேலையற்ற 90 லட்சம் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள ‘பொதுத் தகுதித் தேர்வு’ அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்  என  வைகோ கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ssaamiDec 13, 2019 - 04:34:02 PM | Posted IP 49.20*****

நல்ல விஷயம்தானே - வெளிப்படை தன்மை மிகும் - லஞ்சம் குறையும் - அனால் நீர் பெட்டியை நிறைக்க முடியாதே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory