» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனைவி, 3 குழந்தைகளைக் கொன்று நகை தொழிலாளி தற்கொலை : 3 நம்பர் லாட்டரியால் விபரீதம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 4:28:39 PM (IST)



விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரியால் மனைவி, 3 குழந்தைகளை கொன்று நகைத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் இன்று எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண் (33). இவர் 3 நம்பர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். பரிசு விழும் என்று நம்பி வாங்கிய கடன் நெருக்கடி மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். நகைத் தொழிலாளி அருண் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தன் வீட்டை விற்று, வாங்கிய கடனை அடைத்துள்ளார். பின்னர் வாடகை வீட்டுக்குக் குடிவந்த அருண், மீண்டும் வேலைக்குச் செல்லும்போது தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளார். சிறு சிறு தொகை பரிசாக விழுந்ததால், வருமானத்தை விட கடன் வாங்கி லாட்டரி டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மேலும் கடன் சுமை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் கேட்கத் தொடங்கியதும் அருண் நேற்று நள்ளிரவு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.அதற்குமுன் அவர் காணொலியில் தனது இந்த முடிவுக்குக் காரணமான 3 நம்பர் லாட்டரியை ஒழிக்கவேண்டும், அப்படி செய்தால் என்னைப்போல் ஒரு 10 பேராவது பிழைப்பார்கள் என வேண்டுகோள் வைத்திருந்தார். இணையதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொலி காட்சி வைரலாகப் பரவியது.

3 நம்பர் லாட்டரி விவகாரத்தில் எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கை குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியது: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டவர் அதிக கடன் தொல்லை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். லாட்டரி பிரச்னையும் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த 3 நம்பர் லாட்டரி விவகாரம் பொது வெளியிடங்களில் நடத்துவதில்லை. செல்போன் மூலமாக நெட்வொர்க் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.

நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் லாட்டரி விவகாரத்தில் 200 வழக்குகள் பதிவு செய்து 220 பேரைக் கைது செய்துள்ளோம்.அருண் தற்கொலை செய்துள்ள அந்த நகரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் மட்டுமே இதுவரை 147 வழக்குகள் பதிவு செய்து 160 பேரைக் கைது செய்துள்ளோம். கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறோம். நேற்றிரவு இந்த விவகாரத்தில் முக்கியமான கிங்பின்கள் 12 பேரைக் கைது செய்துள்ளோம்.

கேள்வி: இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை எதுவும் உண்டா? பதில்: கண்டிப்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை இருக்கும். தொடர் குற்றச்செயல்களில் இதுபோன்று ஈடுபடும் நபர்களை, மெயின் ஏஜெண்டுகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்போம். இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory