» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிணம் தின்னும் அரசியலை நடத்தியது பாஜகதான் : பொன்னாருக்கு கே.எஸ். அழகிரி பதிலடி

வெள்ளி 3, ஜனவரி 2020 4:19:04 PM (IST)

பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது இயல்பிற்கு மாறாக, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மீது சாபமிட்டு பேசியிருக்கிறார்.

தி.மு.க.வும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தும், பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தும் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தை மதரீதியாக தூண்டி விட்டு பிணம் தின்னும் அரசியல் நடத்தியது யார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். 450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று எல்.கே. அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தி, நாடு முழுவதும் மதக் கலவரத்தை தூண்டியது யார் ? இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு ? இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை.

2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க., முத்தலாக் சட்டத்தையோ, குடியுரிமை சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? இஸ்லாமியர்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதை இன்றைக்கு இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு முறியடித்து வருகிறார்கள். இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க., காங்கிரஸ் மீது சாபமிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory