» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை கண்ணனை சிறையில் அடைக்க காரணம் என்ன? ப.சிதம்பரம் காட்டம்

சனி 4, ஜனவரி 2020 10:24:52 AM (IST)

நெல்லை கண்ணன் என்ன தீய செயலைச் செய்தார்? அவரை ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்து நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் அவர் மீது குற்றம் செய்யத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 504,505,505(2) மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நெல்லை கண்ணன் ஜனவரி 1-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. அதேபோல், உடல்நலனைச் சுட்டிக்காட்டி நெல்லை கண்ணன் தரப்பில் ஜாமீனும் கோரப்பட்டது. ஆனால் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி பாபு, நெல்லை கண்ணனை வரும் ஜனவரி 13-ம் தேதி வரை (14 நாட்கள்) நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு : பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?. இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory