» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: வங்கி கணக்கில் ரூ.1,677 கோடி செலுத்தியது தமிழக அரசு!

சனி 4, ஜனவரி 2020 12:18:07 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.1,677 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌‌ஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல் கட்டமாக சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் வரும் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை, 2 அடி கரும்புத்துண்டு அடங்கிய பை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது. பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் வழங்க ரூ.1,677 கோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை தவிர்த்து கூட்டுறவு, சுய உதவிக்குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிரால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,86,77,288 குடும்ப அட்டைகளுக்கு தேவையான பொங்கல் பரிசுதொகை ரூ.1,000 வழங்க ரூ.1,867,72,88,000 தொகையில், 1,677,40,52,000 (ஆயிரத்து அறநூற்று எழுபத்து ஏழு கோடியே நாற்பது லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம்) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மூலமாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளுடன், சுய உதவிக்குழுக்கள், இதர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிரால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள தகுதியான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை, மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இந்த விவரத்தை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட மத்திய வங்கிக்கணக்கில் மண்டல வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பெறப்பட்டவுடன் மண்டல இணைப்பதிவாளரின் செயல்முறை உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சங்கங்களின் கணக்கில் வரவு வைக்க அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.15 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரமும், அதிகப்பட்சமாக வேலூர் மாவட்டத்திற்கு ரூ.87 கோடியே 88 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டப்படி வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரே‌‌ஷன் கடைகளில் ரூ.1,000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க வரிசை எண் மற்றும் தெரு வாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory