» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் கைப்பற்றிய இடங்கள்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

சனி 4, ஜனவரி 2020 4:01:14 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது மூன்றாவது நாளாக இன்னும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இன்னும் முழுமையான முடிவுகள் வெளிவராத நிலையில் இன்று (ஜனவரி 4) காலை 6.30 மணி நிலவரம் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு : மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் 454 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக கூட்டணி 241 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 211 இடங்களில் வென்றுள்ளது. கட்சிகள் அடிப்படையில் திமுக 217 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 

அதற்கடுத்து ஆளும் அதிமுக 187 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 13 இடங்களிலும், பாமக 16 இடங்களிலும் சிபிஐ 7 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், சிபிஎம் மற்றும் தேமுதிக ஆகியவை தலா 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. விசிக, மதிமுக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. இதன் அடிப்படையில் மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூா், ராமநாதபுரம், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர் இடங்களை திமுக கைப்பற்றியது.

கோவை, சேலம், தருமபுரி, கடலூா், ஈரோடு, கன்னியாகுமரி, கரூா், நாமக்கல், தேனி, திருப்பூா், தூத்துக்குடி, அரியலூா், விருதுநகா் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள மாவட்ட கவுன்சிலர் இடங்களை அதிமுக கைப்பற்றியது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவும், திமுகவும் தலா 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

ஒன்றிய குழு உறுப்பினர்

இதுபோலவே ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 5090 இடங்களில் 4085 இடங்களுக்கு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக திமுக 2,000 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 126 இடங்களிலும், சிபிஐ 61 இடங்களிலும், சிபிஎம் 31 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக 224 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது இடம் ஆகும். அதுபோலவே தேமுதிக 93 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி என தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் பாஜகவும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் 84 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களை அக்கட்சி பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 94 இடங்களைக் கைப்பற்றிய அமமுக
 
கட்சியாக பதிவு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக களமிறங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் அக்கட்சி 94 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

நாம் தமிழர் கட்சி முதல் வெற்றி

கட்சி ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி முதல் முறையாகத் தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சுனில் வெற்றி பெற்றுள்ளார்.தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,011. இதுபோல சுயேச்சைகளும் சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory