» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் திருநாளையொட்டி பாதி கட்டணத்தில் பேருந்து சேவை : அன்புமணி வலியுறுத்தல்!!

செவ்வாய் 7, ஜனவரி 2020 12:45:05 PM (IST)

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் ஊருக்கு சென்று திரும்ப பாதி கட்டணத்தில் தமிழக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (ஜன.7) வெளியிட்ட அறிக்கையில், "தமிழர் திருநாளான தைப் பொங்கலையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 நடைகள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமிருந்து இன்று வரை வெளியாகவில்லை.

இந்தியாவில் அதிக அளவில் நகர்ப்புறமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். ஊரகப் பகுதிகளில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததாலும், விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாததாலும் கிராமப்புற மக்களும், படித்த இளைஞர்களும் வேலைவாய்ப்பு தேடி அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்வது தான் இதற்குக் காரணம் ஆகும்.

அவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தீபாவளி திருநாள், பொங்கல் திருநாள் ஆகியவற்றுக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு இந்த சேவை பெரும் உதவியாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் போதிலும் கூட நகரங்களில் இடம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதில்லை என்பது தான் அதிர்ச்சி தரும் உண்மையாகும். இதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதல் காரணம் பொருளாதாரம்; இரண்டாவது காரணம் கலாச்சாரம் ஆகும்.

பொங்கல் திருநாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கூட, அவற்றில் மறைமுகமாக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணியாற்றி வரும் மக்களிடம் இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்கு சென்று வர வசதி இல்லை என்பதால், அவர்கள் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே தங்கி விடுகின்றனர்.

இரண்டாவது காரணம் நகர்ப்புற மக்களிடையே ஏற்பட்டு வரும் கலாச்சார மாற்றம் ஆகும். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நிலம், விவசாயம், கால்நடைகள் என இயற்கையுடன் இணைந்து வாழ்வதால், அவர்கள் மற்ற திருநாள்களை விட, பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதையே மகிழ்ச்சியாக கருதுகின்றனர்.

மாறாக, நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து அங்குள்ள கலாச்சாரத்தில் கலப்போருக்கு, காலப்போக்கில் தமிழர் திருநாளின் மகத்துவம் புரிவதில்லை. தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு போன்ற திருவிழாக்களைக் கொண்டாடும் அளவுக்கு தமிழர் திருநாளையோ, தமிழ்ப்புத்தாண்டையோ அவர்கள் கொண்டாடுவதில்லை. இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

பொங்கலைக் கொண்டாட விரும்பினாலும் சொந்த ஊருக்கு செல்ல பொருளாதாரம் பெரும் தடையாக உள்ள மக்கள் ஒருபுறம், நகர்ப்புறவாசிகளாகி விட்டதால் பொங்கலின் மகத்துவத்தை மறந்து விட்ட மக்கள் மறுபுறம் என கிராமங்களில் பொங்கல் திருநாள் அதன் கொண்டாட்டத்தை இழந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, பொங்கல் கொண்டாட்டத்தை சிறப்பானதாக மாற்றியாக வேண்டும். இதற்கு மிகச்சிறந்த வழி சொந்த ஊருக்கு செல்வதற்கான பேருந்து கட்டணத்தைக் கணிசமாக குறைப்பது தான்.

பேருந்துக் கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் போது பொருளாதார வசதி குறைந்த மக்கள் எளிதாக சென்று வர முடியும். நகர்ப்புறக் கலாச்சாரத்தில் மூழ்கி விட்டவர்களும் கூட, குறைவாக கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படும் போது, குறைந்த செலவில் சொந்தங்களையும், நண்பர்களையும் சந்தித்து வரலாம் என்ற எண்ணத்தில் சொந்த ஊருக்கு செல்ல முன்வருவார்கள். இதனால் கிராமப்புறங்களில் பொங்கல் திருநாள் கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக மாறும்.

எனவே, பொங்கல் திருநாளையொட்டி வரும் 13-ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து உட்புறப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும், பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு 17, 18, 19 ஆகிய தேதிகளில் உட்புற பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகுக்க வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory