» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும்: ராமதாஸ்

வியாழன் 23, ஜனவரி 2020 5:31:04 PM (IST)

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெரிய கோயில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வரும் பிப்.5-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் எனவும், சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் இக்கோரிக்கையை முன்வைத்ததையடுத்து, திமுக, மதிமுக, இடதுசாரி ஆகிய கட்சிகளும் இக்கோரிக்கையை ஆதரித்தன. இதனை வலியுறுத்தி, கோரிக்கை மாநாடும் தஞ்சையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதே கோரிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜன.23) தன் ட்விட்டர் பக்கத்தில், "தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. ஆகம விதிகள் இந்தக் கோரிக்கைக்கு எதிராக இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்! சிவபெருமான் தமிழ்நாட்டில்தான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளிலும் தமிழிலேயே உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது தானே சரியான செயலாக இருக்க முடியும்?" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory