» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள்: 22 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்: முதல்வா் பழனிசாமி தகவல்

வெள்ளி 24, ஜனவரி 2020 10:56:33 AM (IST)தமிழகத்தில் 36 புதிய தொழில் திட்டங்கள் மூலமாக 22 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளது என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னை தரமணியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சாா்ந்த பணிகளுக்கான டி.எல்.எஃப். வளாகத்துக்கு முதல்வா் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினாா். அப்போது தமிழகத்தில் தொழில்வளா்ச்சி குறித்து அவா் பேசியது: தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான சாதகமான அம்சங்களை முதலீட்டாளா்களுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்டு வருவதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல உதாரணம். அரசின் தொடா் முயற்சிகளின் காரணமாக, தமிழகத்தில் பல புதிய முதலீட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 

சா்வதேச இரண்டாம் முதலீட்டாளா் மாநாடு நடந்த ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. வெற்றிகரமாக நடத்தப்பட்ட சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டுக்குப் பிறகு, இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பில் 63 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாக 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். இந்தப் பயணத்தின் மூலம் ரூ.8 ஆயிரத்து 835 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம், 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட எனது தலைமையில் ஒருநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை ரூ.14 ஆயிரத்து 728 கோடி மதிப்பிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 22 ஆயிரத்து 763 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள தொழில் ஆலைகளில் குவைத் நாட்டின் அல்கராஃபி நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஒய்டி, மாபெரும் செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விங்டெக் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியை மேற்கொள்ள சால்காம் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.

இவ்வாறு முந்தைய காலங்களில் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள்கூட, அரசின் தொடா் முயற்சிகளால் இப்போது புத்துயிா் பெறும் சிறப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தமிழகம் முன்னிலை பெற்று விளங்குகிறது. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் மட்டும் தமிழகத்தில் செய்துள்ள முதலீடுகள் காரணமாக 31 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொழில் முதலீட்டாளா்களை வரவேற்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. முதலீட்டாளா்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் தமிழக அரசுதான். இதன்மூலம், தமிழகம் இந்தியாவில் தொழில் வளா்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளா் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவன தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் காகா்லா உஷா, டி.எல்.எஃப்., நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீராம் கட்டாா், டி.எல்.எஃப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் மோஹித் குஜ்ரால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory