» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநரிடம் 7 தமிழர் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு பெற வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்

வெள்ளி 24, ஜனவரி 2020 11:45:38 AM (IST)

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆளுநரை உடனடியாக சந்தித்து 7 தமிழரின் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு உடனே பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அரசியல் சட்டப் பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்துப் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது" வரவேற்கத்தக்கது. 29 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலையில் புதிய திருப்பமாக உச்சநீதிமன்றமே தலையிட்டிருப்பதால், ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றி மகிழ்ச்சி தருகிறது.

7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட விவரங்களை #TNgovt உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திட வேண்டும். ஆளுநரைச் சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டி, 7 பேர் விடுதலைக்கான ஒப்புதலை முதல்வர் உடனே பெற வேண்டும். தமிழ்நாடு சட்டசபையில் ஏழு பேர் விடுதலை குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய பா.ஜ.க. அரசு மதிக்கவில்லை. பிறகு தற்போது ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 15 மாதங்களுக்கு மேல் தமிழக ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது; ஆரோக்கியமான ஆளுநர் - அமைச்சரவை உறவிற்கும் எதிரானது. 

"நீட்" தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா குறித்தே விளக்கம் கேட்போம் என்று சட்டசபையில் அறிவித்து தமிழக மக்களை ஏமாற்றிய முதலமைச்சர், தன் அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது ஆளுநரைச் சந்தித்து தீர்மானத்திற்கு ஒப்புதல் பெறவோ இதுவரை முன்வரவில்லை. இது முதலமைச்சர் எந்த அளவுக்கு இந்த ஏழு பேரின் விடுதலையில் ஆட்டம் காட்டுகிறார் என்பதை உணர்த்துகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தொடர்ந்து அதிமுக அரசு செய்து வரும் குழப்பங்களும், மத்திய பாஜக அரசுடன் சேர்ர்ந்து கொண்டு உள்நோக்கத்தோடு செயல்படுவதும் வேதனையாக இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு, அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம், அதனை ஆளுநர் எத்தனை மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார், ஆளுநர் அலுவலகத்திற்கு இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி அமைச்சரவை எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முழு விவரங்களையும் உச்சநீதிமன்றத்திற்குத் தாமதமின்றி தெரிவித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவினை மேற்கோள் காட்டித் தமிழக ஆளுநர் அவர்களை உடனடியாக நேரில் சந்தித்து, இந்த ஏழு பேரின் விடுதலைக்கான ஒப்புதலைத் தாமதமின்றிப் பெற்றிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory