» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மறையக்கூடிய மையினால் குரூப் 4 தேர்வு எழுதி முறைகேடு: பரபரப்பு தகவல்!!

வெள்ளி 24, ஜனவரி 2020 11:57:01 AM (IST)

குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம். இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது.

குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது. இது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி  முறைகேடு தொடர்பாக  நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 39 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில், பிற மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, கடந்த 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

முறைகேடு நடைபெற்றது உண்மை என தெரியவந்ததும்  இது குறித்து டிஎன்பிஎஸ்சி டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளது. இதனை தொடர்ந்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குரூப்-4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 2019ல் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என்று  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சிபிசிஐடி போலீசார் முதல்கட்டமாக 2  வட்டாட்சியர்கள் உள்பட  12 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்ட்டு உள்ளனர். இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத  டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 99 பேருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வெழுதிய 99 பேரும்  இடைத்தரகர்களின் ஆலோசனைப்படி சிலமணி நேரங்களில் மறையக்கூடிய மையிலான பேனாவால் தேர்வு எழுதி உள்ளனர். விடைகளை குறித்து தகுந்த  விடைகளை மறையக்கூடிய மையினால் ஆன பேனாவில் எழுதி உள்ளனர்.  தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 52 பேரின் துணையுடன் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.    தேர்வு முடிந்ததும் இடைத்தரகர்கள்  தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த 52 பேர்  உதவியுடன் அந்த விடைதாள்களை எழுத்து மறையக்கூடிய மையினால் எழுதிய விடைகளை திருத்தி உள்ளனர். மோசடி செய்து தேர்வு எழுதியவர்களில் 39 பேர்  தரவரிசையில் முதல் 100 பேர்களுக்குள் வந்து உள்ளனர். ராமேசுவரம் மற்றும்   கீழக்கரை ஆகிய மையங்களில் மட்டுமே முறைகேடு நடைபெற்று உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory