» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்; தேர்வு முறையில் கட்டுப்பாடுகள்- டிஎன்பிஎஸ்சி

வெள்ளி 24, ஜனவரி 2020 4:05:29 PM (IST)

தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறும்  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு தேர்வு மையங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 262 பேர் மொத்தமாக தேர்வு எழுதினர். அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் முதல் 100 தரவரிசையில் 35 பேர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலான தேர்வர்கள் சென்னை, வேலூர், விழுப்புரம், அரக்கோணம், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் உள்நோக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்ததாக கூறப்பட்டது. அதுவுமல்லாமல் குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட 96 தேர்வர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துபோன தம்முடைய மூதாதையர்களுக்காக திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தை தேர்வு செய்ததாக விசாரணையில் பதிலளித்திருந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தும் தேதியில் அங்கு சென்றதாக பெரும்பாலானோர் ஒரே பதிலை கூறியதால் முறைகேடு நடந்தது உறுதியானது.

இதற்கிடையே இந்தப் பிரச்சினையை களைய தேர்வு எழுதும் நபர்கள் வேறு மாவட்டத்திற்கு சென்று முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க டிஎன்பிஎஸ்சி புதிய முறையை விண்ணப்பத்தில் சேர்த்தது. கடந்த 20-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் விண்ணப்பிக்கும்போது இந்த புதிய நடைமுறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. அதில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கும் போது தேர்வர் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரா? அல்லது வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றால் என்ன காரணத்திற்காக தனது சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுதாமல் வெளிமாவட்டத்தை தேர்ந்தெடுக்கிறார் என்கிற காரணத்தை தேர்வர்கள் அளிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் தேர்வர்கள் வேறு மாவட்டத்தை தேர்வு செய்வது வேலைக்காகவா? படிப்பதற்காகவா? என்ன காரணம் என்பது போன்ற காரணத்தை சரியாக கூற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில், இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory