» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகளை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடக்கம்: தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

திங்கள் 25, மே 2020 4:32:25 PM (IST)ஆதிச்சநல்லூர் சிவகளையில் அகழாய்வு பணி துவங்கியது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது தாமிரபரணி நாகரீகம். இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த இடமும் ஆதிச்சநல்லூர் தான். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜகோர் 1876 ல் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு காட்சிபடுத்தினார். 1902 ல் அலெக்ஸாண்டனர் ரியா என்பவர் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை சென்னை அருங்காட் சியகத்தில் கொண்டு வைத்தார்.  அவரின் நீண்ட அறிக்கைத் தான் இன்றைக்கு ஆதிச்சநல்லூரை உலகமே ஊற்று நோக்க வைத்துள்ள இதற்கிடையில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் சார்பில் தியாக சத்தியமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வின் அறிக்கை இதுவரை வெளியிட வில்லை. எனவே இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மீண்டும் இந்திய அரசு அகழ்வாய்வை ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ள வேண்டும், 2004 நடந்த ஆய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும். இங்கு கிடைத்த பொருள்களை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சி படுத்த வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு 4.09.2017 அன்று விசாரணைக்கு வந்தது. அதன் பின் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது.  இதற்கிடையில் மனுதாரர் சிவகளையில் அகழாய்வு செய்ய வேண்டும் எனவும், தாமிரபரணி கரையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கூடுதல் மனுதாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு 2004ல் கிடைத்த முதுமக்கள் தாழியை அமெரிக்கா புளோரிடா ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பியது. அந்த முதுமக்கள் தாழி 2900 வருடங்களுக்கு முந்தையது என உறுதியானது. இதனால் ஆதிச்சநல்லூர், கீழடியை விட முந்தையது என நிருபணமானது. இதற்கிடையில் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று 31.01.2020 அன்று தொடங்கியது.

இதற்காக ஆதிச்சநல்லூரில் உள்ள புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் அருகில் 50க்கு 50 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் சுத்தம் செய்தனர். பின்னர் அந்த இடத்தில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் சுமார் 7 அடி ஆழம் பார்வையிட்டனர். இந்த குழுவில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் கள பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

இதே போல் சிவகளையில் உள்ள பரம்பில் மூன்று இடத்தில் அகழாய்வுக்கு ஆயத்த பணி நடந்தது. இதற்காக தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் பூமிக்குள் உள்ள முதுமக்கள் தாழிகளை கண்டு பிடிக்கும் பணிநடந்தது. சிவகளை தொல்லியல் கள பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் தொல்லியல் துறையினர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட் டனர்.

இதற்கிடையில் மத்திய பட்டுஜெட் கூட்டதொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதாகவும், இந்த பணியை அமைச்சர் மா.பாண்டியராஜன் துவக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் தமிழ் ஆர்வலர்கள் சோர்வடைந்தாலும் விரைவில் பணி தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து நின்றனர். இதற்கிடையில், திங்கள்கிழமை அகழாய்வு பணிகள் துவங்கியது. காலை 9 மணிக்கு துவங்கும் இந்த அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியைப் பொறுத்தவரை இந்த அகழாய்வு பணி 6ம் கட்ட அகழாய்வாகும். இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 வருடத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடந்தது. 

முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு துவங்க உள்ளது. இந்த அகழாய்வு மீது தொல்லியல் துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்களும், தொல்லியல் இயக்குனர் உதயசந்திரன் அவர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். கீழடியில் அகழாய்வு செய்து 24 மொழிகளில் அதன் அகழாய்வு அறிக்கையை இந்த கூட்டணியினர் வெளியிட்டனர் . அதுபோலவே ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு அறிக்கையை விரைவில் 30க்கு மேற்பட்ட மொழிகளில் வெளியிடுவார்கள் என ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் , சிவகளையில் தொல்லியல் துறை அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த அகழாய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, உலக நாகரீகத்தின் தொட்டில் தாமிரபரணி நாகரீகம் ஆதிச்சநல்லூர். 144 வருடங்களுககு முன்பே இந்தியாவில் முதன் முதலில் அகழாய்வு நடந்த இடம். ஆனால் இதுவரை முழுமையான அகழாய்வு அறிக்கை வெளிவரவில்லை. 1902ல் அலெக்ஸாண்டர் இரியா நடத்திய ஆய்வின் குறு அறிக்கையே தற்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 2004ல் நமது இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த அறிக்கையும் 16 வருடங்களை தாண்டி ஒரு பகுதியே வெளிவந்துள்ளது. 

முழுமையாக வெளிவரவில்லை. அதனால் தான் நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவின் படி, மாநில அரசு ஆதிச்சநல்லூர்,சிவகளையில் அகழாய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசும் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க பணம் ஓதுக்கீடு செய்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் நமது தமிழக தொல்லியல் துறை கீழடியில் சிறப்பாக பணியாற்றி அதன் ஆய்வறிக்கையை 24 மொழிகளில் கொண்டு வந்துள்ளது. எனவே தற்போது மாநில அரசு ஆதிச்சநல்லூர் , சிவகளையை ஆய்வு செய்வதால் இந்த அறிக்கை மிக வேகமாக, அதே வேளையில் பல மொழிகளில் வெளிவரும் என ஆவலோடு காத்து இருக்கிறோம். எனவே இந்த பணி தமிழரின் தொன்மையை உலகிற்கு பறை சாற்றும் என்றார்.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை துவக்க வந்த துணை இயக்குனர் சிவனாந்தம் அவர்களை ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிவகளையில் அகழாய்வு பணியை தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் துவக்கி வைத்தார். தூத்துக்குடி தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன், சிவகளை கள பொறுப்பாளர் பிரபாகரன், நிதி பொறுப்பாளர் தங்கதுரை, அகழாய்வு பிரிவை சேர்ந்த பிரபாகரன், பாஸ்கர், சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, பஞ்சாயத்து துணை தலைவர் கைலாசம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம், மதி, ஒன்றிய கவுன்சிலர் ராமலெட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், பஞ்சாயத்து செயலாளர் வெங்கடேஷ், தமிழ் ஆசிரியர் பாலகுமார், சேர்மதுரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கணபதி ராஜா, சக்தி செல்வராஜ், கணேசன், சுடலை முத்து, விஜய சுப்பரமணிய ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் சேகர், சுடலை மணி கிருஷ்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த அகழாய்வு தொடங்குவதால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory