» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜோதிடத்தை நம்பி விபரீதம்: கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கொடூர கணவர்!!

திங்கள் 25, மே 2020 5:02:34 PM (IST)

அம்மாபேட்டை அருகே குழந்தை பிறந்தால் ஆபத்து என ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூரை சேர்ந்தவர் முனுசாமி(வயது 32). தொப்பபாளையத்தை சேர்ந்த மூர்த்தி மகள் ரம்யா(25). இவருக்கும், முனுசாமிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு சுகதீஸ்வரன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது. முனுசாமிக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரம்யா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். 

இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீண்டும் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து முனுசாமி ஜோதிடம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, ரம்யாவுக்கு 2-வதாக குழந்தை பிறந்தால் முனுசாமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி, தனது மனைவியிடம் அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு கூறி வந்துள்ளார். அதற்கு ரம்யா மறுத்துள்ளார்.

இதனால் கணவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம், கருவை கலைக்குமாறு கூறி அடித்து உதைத்துள்ளார். பின்னர் அவருடைய கழுத்தில் இருந்த தாலி கயிற்றை கையால் இழுத்துக்கொண்டு, காலால் கர்ப்பிணியான மனைவியை ஈவு, இரக்கம் இல்லாமல் எட்டி உதைத்துள்ளார். இதனால் ரம்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ரம்யாவை மீட்டு அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்ததும் முனுசாமி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். தாய் வீட்டில் தங்கியிருந்த ரம்யாவுக்கு கடந்த 22-ந் தேதி திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றில் வளர்ந்த கரு முனுசாமி எட்டி உதைத்ததால் ஏற்கனவே கலைந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்த ரம்யா அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory