» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் விமான சேவை மீண்டும் துவங்கியது : பயணிகளுக்கு கரோனா பரிசோதனை!!

செவ்வாய் 26, மே 2020 9:59:10 PM (IST)தூத்துக்குடி-சென்னை இடையேயான விமான சேவை சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது.  சென்னையில் இருந்து 42 பயணிகளுடன் விமானம் வந்து இறங்கியது. 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான நிறுவனங்கள் மூலம் 5 விமான சேவைகள் நடைபெற்று வந்தது. அதேபோன்று பெங்களூருவுக்கும் ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பாக இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சென்னை-தூத்துக்குடி-சென்னை இடையேயான விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியது. ஆனால், நேற்று காலையில் திடீரென விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி-சென்னை இடையேயான விமான சேவை இன்று தொடங்கியது.  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 42 பயணிகளுடன் விமானம் வந்து இறங்கியது.  இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்த அனைத்து பயணிகளுக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘  கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். பயணிகளுக்கு முத்திரை

குஜராத்தில் இருந்து வந்த பயணியை மட்டும் தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து சென்றனர். அவருக்கு கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் கையில் அழியாத மை மூலம் முத்திரை குத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த கைக்குழந்தைகள் உள்பட 57 பேருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தூத்துக்குடியிலிருந்து 53 பயணிகளுடன் 1-23 மணிக்கு விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. 

ஆட்சியர் ஆய்வு

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நிலைய மேலாளர் ஜெயராமன், சார்  ஆட்சியர் சிம்ரான் ஜீத்சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி-சென்னை விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு வந்த பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அறிகுறிகள் இல்லாதவர்கள் வெப்ப பரிசோதனை முடிக்கப்பட்டு கையில் முத்திரையிடப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

இ-பாஸ் இல்லாமல் வந்தால், உடனடியாக பாஸ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 31-ந்தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள் விமானம் வருகிறது. அதன்பிறகு வழக்கம்போல் விமானம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு மராட்டியம், குஜராத்தில் இருந்து வந்த 126 பேருக்கும், சென்னையில் இருந்து வந்த 8 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory