» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூலிப்படை மூலம் தொழிலதிபர் கொலை: மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய் 30, ஜூன் 2020 3:53:11 PM (IST)

தஞ்சை அருகே கூலிப்படை மூலம் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

தஞ்சை காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் யூசுப் (45). இவர், குவைத் நாட்டில் வேலை செய்தபோது அங்கு வேலை பார்த்த இலங்கையை சேர்ந்த அசிலா என்ற ரசியாயை(37) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். யூசுப் திருமணத்திற்கு பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி உள்ளார்.இவர் தஞ்சை விளார் சாலையில் வணிக வளாகத்துடன் கூடிய வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தஞ்சையை அடுத்த குருங்குளம் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் பண்ணை வைத்து விவசாயம் செய்து வந்தார். தொழிலதிபரான இவர் காரில் சென்றபோது தஞ்சையை அடுத்த வல்லம் அருகே ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் யூசுப்பை, அவருடைய மனைவி அசிலா என்ற ரசியா கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். யூசுப் வங்கியில் வைத்திருந்த நகை-பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து மோசடி செய்ததையடுத்து அசிலா மீது யூசுப் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பின்னர் அசிலா கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வந்தார். யூசுப் தஞ்சையில் வசித்து வந்தார். இவர்களிடையேயான விவாகரத்து வழக்கு திருச்சியில் நடந்து வந்தது. இதையடுத்து திருச்சியில் இருந்த அசிலாவை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்த அசிலா, பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் கூலிப்படையை வைத்து கணவரை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அசிலா, திருச்சி காந்தி மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(25), திருச்சி மேக்குடியை சேர்ந்த சகாதேவன்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சையை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான சகாதேவன், பிரகாஷ் 2 பேரும் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவர். கைதான அசிலா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். 

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது: யூசுப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பின்னர் சமரசமாக செல்ல முடிவு செய்து போனில் பேசினேன். மேலும் அவர் அவ்வப்போது திருச்சியில் உள்ள எனது வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது யூசுப்புக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்தேன். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அதன் பின்னர் யூசுப் எனது வீட்டிற்கு வரவில்லை. மேலும் செலவுக்கு பணம் தராமல் பல பெண்களுடன் யூசுப் சுற்றி வருவதாக கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து தஞ்சையை சேர்ந்த கூலிப்படையை அணுகினேன். ஆனால் அவர்கள் ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு கொலை செய்யவில்லை.

இதனையடுத்து நான் தஞ்சையில் முன்பு தங்கி இருந்த வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு தங்கி இருந்த திருச்சியை சேர்ந்த சகாதேவனிடம் கூறி யூசுப்பை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக ரூ.15 லட்சம் தருவதாக கூறி, நான் வைத்திருந்த காரை விற்று ரூ.2 லட்சத்தை முன் பணமாக சகாதேவனிடம் கொடுத்தேன். அதன் பின்னர் நான் ஏற்கனவே பணம் கொடுத்திருந்த கூலிப்படையை சேர்ந்தவர்களுடன் சகாதேவனும், அவருடைய நண்பரும் சேர்ந்து யூசுப்பை கொலை செய்தனர். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory