» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெய்வேலி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் 6பேர் உயிரிழப்பு -மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதன் 1, ஜூலை 2020 5:10:50 PM (IST)

என்.எல்.சி.இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கொதிகலன்கள் உரியக் காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததும், புதுப்பிக்கப்படாததும் தான் விபத்துக்கு காரணமாக கூறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.மேலும், அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். 17 பேர் காயமடைந்துள்ளார்கள். இன்னும் பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்திய அளவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பாதுகாப்பு என்பது மிக மிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துகிறது. தொடர்ந்து உரியக் காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததும், புதுப்பிக்கப்படாததும்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நெய்வேலி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் இன்றைய தினம் ஆறு உயிர்களை இழந்துள்ளோம்.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. மே 7-ம் தேதி நடந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தார்கள். இப்போது 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். இப்படி விபத்துக்களும் உயிரிழப்புகளும் நடப்பது வாடிக்கையாகி விட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களது பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டியது நெய்வேலி நிறுவனம்தான்.

காயம்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளித்து அவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும். இறந்தவர்கள் குடும்பத்துக்கும், காயம்பட்டவர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை நிர்வாகம் வழங்க வேண்டும். இனியொரு முறை விபத்து ஏற்படாது என்றும், இனியொரு தொழிலாளி பாதிக்கப்பட மாட்டார் என்றும் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும். நிறுவனத்தைப் புதுப்பித்து உயிரிழப்புகளைத் தடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory