» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து

புதன் 5, ஆகஸ்ட் 2020 5:43:01 PM (IST)

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளான பூரண சுந்தரி, பால நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், 2019-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம், மணிநகரம் பகுதியைச் சேர்ந்த செல்வி பூரண சுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த  பாலநாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்”

என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான் அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் "மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டுமென அன்புடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் பூரண சுந்தரி மற்றும்  பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை.  இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory