» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக்கூடாது: சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை

வெள்ளி 18, செப்டம்பர் 2020 5:12:38 PM (IST)நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக்கூடாது” என்று சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியது.

அதில், "கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘காணொளி கான்பரன்சிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்று விமர்சித்திருந்தார். நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். எனினும், சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் குரல் கொடுத்தனர்.

இதுதொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அமர்வு இன்று (செப்டம்பர் 18) தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிபதி சுப்பிரமணியம் எழுதிய கடிதத்தை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய இந்த விவகாரம் தலைமை நீதிபதி சார்பில் அவருக்கு அனுப்பப்பட்டது. அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், சூர்யா மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி அமர்வு, காணொலி காட்சி மூலமாக 42 ஆயிரத்து 233 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக சுட்டிக்காட்டியது. இதுபோன்று அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றிய சூழலில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமான விமர்சனமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

தனி நபர்கள் தகவல்களை சரி பார்த்த பிறகே பொதுத்தளத்தில் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அது தவறான பல கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், "அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள் அடக்கியது. நடிகர் சூர்யாவின் கருத்துக்களை ஆய்வு செய்த போது, பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், "நியாயமான விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று” என்று கூறிய நீதிபதிகள், அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் போது கவனம் தேவை. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக்கூடாது” என்று சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory