» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்றுடன் 6 மாதத்தை நிறைவு செய்த கொரோனா ஊரடங்கு - 519 டூ 57லட்சமாக உயர்ந்த பாதிப்பு!!

வியாழன் 24, செப்டம்பர் 2020 7:55:22 PM (IST)கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்று 6 மாதத்தை நிறைவு பெறுகிறது. இந்த ஊரடங்கால் ஏற்பட்ட தாக்கத்தை பற்றி பார்ப்போம்...

கடந்த 20 ஆண்டுகளில், சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் என நாம் 5 குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம். ஆனால் நாம் 5 ஆபத்துகளில் தப்பி, 6வது ஆபத்து கொரோனா வைரஸ் வடிவில் நம்மை பிடித்துக் கொண்டுவிட்டது. 

சீனாவின் யூகான் மாநிலத்தில் கடந்த 2019ஆம் டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் ஜனவரி 30 அன்று முதல் பரவத் தொடங்கியது. கடந்த 14 மார்ச் 2020, அன்று கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்தது. 

கடந்த 22 மார்ச் 2020 ஞாயிறு அன்று, இந்தியாவில் வெறும் 360 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி 7 பேர் பலியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் முதலில் அன்று 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தது. பின்னர் மார்ச் 24 அன்று, பிரதமர் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை உத்தரவிட்டார். பின்னர் படிப்படியாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கால் விமானம், ரயில், பஸ் என பொதுபோக்குவரத்துகள் முடங்கியது. அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வெளியே நடமாட தடைவிதிக்கப்பட்டது. உணவு, மருந்து விற்பனை இடங்களைத் தவிர மற்ற கடைகள், வணிக, தொழில் நிறுவனங்களுக்கு அதிக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் சமூக இடைவெளியுடன், முக கவசங்களை அணிந்து கொண்டு மக்கள் தங்களை தேவையான பொருட்களை வாங்கி வந்தனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் முடிங்கியது. கல்வி நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பலர் பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய அன்லாக் என்ற பெயரில் தளர்வுகளை அறிவித்த பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 519 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியான நிலையில் இன்றைய (செப் 24) நிலவரப்படி 57,30,184 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆக இருந்த (மார்ச் 24) பலியானோர் எண்ணிக்கையும் தற்போது (செப்.24) 91,149 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்கள் மேலும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடிப்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பதும், தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory