» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக - பாஜக ஊழல் கூட்டணி ரகசியம்: சேகர் ரெட்டி வழக்கு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்

புதன் 30, செப்டம்பர் 2020 10:27:57 AM (IST)

சேகர் ரெட்டி மீதான வழக்கை ஆதாரமில்லை என்று முடித்து வைத்து, மத்திய பா.ஜ.க. அரசு சிறப்பு பரிசை அ.தி.மு.க.வுக்கு வழங்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேகர் ரெட்டிக்கு எதிரான ரூ.247.13 கோடி ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என்று, அ.தி.மு.க. செயற்குழு நடைபெற்ற 28-9-2020 அன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கூறி, அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சிறப்பு பரிசை அ.தி.மு.க.வுக்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

துண்டு சீட்டை வைத்து துப்புத் துலக்கும் ஆற்றல் படைத்த சி.பி.ஐ. அமைப்பிற்கு, 170 பேருக்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த பிறகும், 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களை பரிசீலித்த பிறகும், ஆதாரம் கிடைக்கவில்லை; ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வங்கி அதிகாரியைக்கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கவில்லை என்று ஐகோர்ட்டே கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு விசாரணையை நடத்தி, இப்படியொரு சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது என்றால், இந்த பரிசை வழங்கியது சி.பி.ஐ. என்ற அமைப்பு என்பதைவிட, மத்திய பா.ஜ.க. அரசுதான் என்று அடித்துச் சொல்ல முடியும்.

அடுத்தது குட்கா டைரி ஊழல் வழக்கு ரூ.250 கோடி வரி ஏய்ப்பு, ரூ.40 கோடிக்கு மேல் ஊழல் என்ற மக்களின் உயிரைப் பறிக்கும் குட்கா வழக்கில், சென்னை ஐகோர்ட்டு ஏன் சுப்ரீம் கோர்ட்டே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று கொத்தாக டைரியே கிடைத்தது. ஆனால் அத்தனை விசாரணைகளும் முடக்கப்பட்டு; குட்கா டைரியில் இடம்பெற்றிருந்த அமைச்சரே விடுவிக்கப்பட்டார்.

தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவும் விடுவிக்கப்பட்டார். கீழ் மட்ட அதிகாரிகள் மீது மட்டும் இப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் ரூ.250 கோடி குவாரி வரி ஏய்ப்பும் கண்டுகொள்ளப்படாமல், திரைபோட்டு மறைக்க சி.பி.ஐ. பணிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில், ரூ.80 கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பட்டியல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்டது; தேர்தலே ரத்து செய்யப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கைப்பற்றப்பட்டதாக 16 மாதங்களுக்குப் பிறகு சி.பி.ஐ.யிடம் புகாரை கொடுத்துள்ள தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ இந்த அளவுகோலை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் ஏன் கடைப்பிடிக்கவில்லை? இதில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்போடும் சி.பி.ஐ. ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடவில்லை? இதுதான் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள ஊழல் கூட்டணி ரகசியம்.

அதனால்தான் ரூ.570 கோடி திருப்பூர் கன்டெய்னர் வழக்கில் துவங்கி, இன்று நடைபெறுகின்ற பி.எம். கிசான் ஊழல் வரை அ.தி.மு.க. அரசுக்கு முட்டுக்கொடுத்து, பாதுகாத்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலில் வைத்த கூட்டணிக்காகவும், இனி 2021-ல் அ.தி.மு.க.வுடன் வைக்கும் கூட்டணிக்காகவும், விரும்பிய எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கும் தான், இருவருக்கும் இடையில் வெளிப்படையான இந்த ஊழல் பாதுகாப்பு ஒப்பந்தமா? மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்தி விவசாயிகளை வஞ்சித்திட இந்த ஒப்பந்தமா?

ஊழல்... ஊழல்... என்று ஊர் முழுக்க பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க. அரசை கட்டிக் காப்பாற்றுவது, பாதுகாத்து நிற்பது சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை பிசுபிசுக்க வைப்பது ஏன்? ஏன்? இந்தக் கேள்வியைத் தமிழ்நாடே ஒன்றிணைந்து கேட்கிறது. பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு உரிய உண்மையான பதிலைச் சொல்வாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory