» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி

சனி 24, அக்டோபர் 2020 10:35:18 AM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி பரிவேட்டை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று மகாதானபுரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பரிவேட்டை நிகழ்ச்சியை எளிமையாக கோவில் வளாகத்திலேயே நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதற்கு பக்தர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாரம்பரிய முறைப்படி பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்திலேயே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக பக்தர்கள் சங்கத்தினர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்களுடன் கோட்டாட்சியர் மயில் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில், பக்தர்கள் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக கலெக்டர் இறுதி முடிவை எடுப்பார் என கோட்டாட்சியர் மயில் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை சந்தித்து, திருவிழாவை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பிறகு தளவாய்சுந்தரம், கலெக்டரிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்தநிலையில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கட்டுப்பாடுகளை விதித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிக்கையாக வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதாலும், கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் வாகன நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்பட வேண்டும்.

பரிவேட்டை வாகனத்தை 8 நபர்கள் சுமந்து செல்லலாம். 26-ந் தேதி அன்று கோவில் வளாகத்தில் இருந்து மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்தில் பகவதியம்மன் சிலையுடன் புறப்பட வேண்டும். மீண்டும் 7 மணிக்குள் கோவில் வந்தடைய வேண்டும். மகாதானபுரம் கல் மண்டபத்தில் வைத்து பரிவேட்டை நிகழ்ச்சியை முடித்து கிருஷ்ணன்கோவில் சென்று பூஜை நடத்திய பிறகு கோவிலை சென்றடைய வேண்டும். சுவாமி வாகனம் செல்லும் பாதையில் பொதுமக்கள் நின்று பூஜை பொருட்கள் கொடுத்து வழிபாடு நடத்த அனுமதி இல்லை. மேலும் சுவாமி அலங்காரத்திற்கு தனிநபர்கள் மாலை போன்றவற்றை வழங்கக்கூடாது. 

சாமி வாகனம் செல்லும் பாதையில் பொதுமக்கள் மத வழிபாட்டு பொறுப்பாளர்கள் யாரும் பின் தொடர்ந்து செல்லக்கூடாது. பொதுமக்கள் கூடி நிற்கவோ, பகவதி அம்மன் குதிரை வாகனத்தை வழிமறிக்கவோ கூடாது. ஒலிபெருக்கிக்கு அனுமதியில்லை. மத வழிபாட்டு பொறுப்பாளர்கள் வழியில் நின்று அன்னதானம் வழங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது.மேலும் விழாக்குழுவினர் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சினை எதுவுமின்றி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை சாமி வாகன நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory